This Article is From Sep 18, 2019

வான்வெளியை பயன்படுத்த மோடிக்கு அனுமதியில்லை! தடை விதித்தது பாகிஸ்தான்!!

இம்மாத தொடக்கத்தின்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்துக்கு சென்றார். அப்போது, அவருக்கு தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது.

பிரதமர் மோடி ஒரு வார கால அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லும்போது தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம்தேதி முதல் தனது அமெரிக்க பயணத்தை தொடங்கவுள்ளார். செப்டம்பர் 27-ம்தேதி வரையில் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது விமானம் பாகிஸ்தான் வழியே அமெரிக்காவுக்கு செல்லவிருந்தது. 

இந்த நிலையில், இந்தியா உடனான உறவில் பாகிஸ்தான் விரிசலை ஏற்படுத்தி இருப்பதால், மோடி அமெரிக்க செல்வதற்கு தங்கள் நாட்டின் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.  

இம்மாத தொடக்கத்தின்போது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்துக்கு சென்றார். அப்போது, அவருக்கு தங்கள் நாட்டின் வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது. 

முன்னதாக கடந்த பிப்ரவரி 26-ம்தேதி பாலகோட்டில் இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதலை நடத்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை அழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் தனது வான் வெளியை இந்தியா பயன்படுத்த தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை ஜூலை மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

இந்த தடை காரணமாக பாகிஸ்தானுக்கு ரூ. 800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

.