2019 குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக பங்கேற்க ட்ரம்புக்கு அழைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தினத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது

2019 குடியரசு தினம்: சிறப்பு விருந்தினராக பங்கேற்க ட்ரம்புக்கு அழைப்பு!
New Delhi:

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தினத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ட்ரம்பை, குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய தரப்பில் சில மாதங்களுக்கு முன்னரே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சென்ற ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், ‘அதிபர் ட்ரம்ப், உங்கள் குடும்பத்துடன் நீங்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களை வரவேற்கும் பெருமையை எனக்கு நீங்கள் தருவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று கூறினார். இதையடுத்து, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ட்ரம்ப்பின் ஆலோசகர்களில் ஒருவரும் மகளுமான இவான்கா ட்ரம்ப் இந்தியாவுக்கு வந்தார்.  இவான்கா, சர்வதேச தொழில் முனைவோர்களுக்கான மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவில் ட்ரம்ப் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு, அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பாராக் ஒபாமா, புது டெல்லியில் நடந்த சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, 2014 ஆம் ஆண்டு, ஜப்பான் அதிபர் ஷின்சோ அபே மற்றும் 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு அதிபர் ஹாலண்டே ஆகியோர் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சமீப காலமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக் போர், இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வழங்கப்படும் விசாவில் ஏற்படுத்தி வரும் மாற்றம், ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் இருக்கும் முரண், ஈரானிடமிருந்து அமெரிக்காவின் எதிப்பையும் மீறி தொடர்ந்து எண்ணெய் வாங்குவது என இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு விஷயங்களில் ஒத்துழைப்பு இல்லாமல் இருக்கும் நிலையில், இந்தியாவின் இந்த அழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ட்ரம்பை அழைத்தது குறித்து வெளியுறவுத் துறையிடம் கேட்ட போது, ‘அந்த விஷயம் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.