''கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மற்ற நாடுகளுக்கு முன்னரே நடவடிக்கை எடுத்த இந்தியா!!''

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமாக தொடங்கியது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

''கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மற்ற நாடுகளுக்கு முன்னரே நடவடிக்கை எடுத்த இந்தியா!!''

ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயணமாக சொந்த ஊருக்கு செல்கின்றனர்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பை இந்தியா சரியாக கையாளவில்லை என விமர்சனம்
  • மற்ற நாடுகளை விட முன்கூட்டியே நடவடிக்கை எடுத்ததாக மத்திய அரசு விளக்கம்
  • கூலி தொழிலாளிகள் சொந்த ஊரை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்
New Delhi:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மற்ற நாடுகள் சுதாரிக்கும் முன்னரே இந்தியா நடவடிக்கையை மேற்கொண்டது என்று விமர்சனங்களுக்கு மத்திய அரசு பதில் கொடுத்துள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு தாமதமாக தொடங்கியது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அவற்றை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

ஜனவரி 30-ம்தேதிதான் கொரோனாவை சர்வதேச சுகாதார எமர்ஜென்ஸி என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதற்கு முன்னரே மத்திய அரசு இந்தியாவின் எல்லைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளத் தொடங்கியதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது. 

இதேபோன்று சர்வதேச விமான நிலையங்களில் வெப்பமானியைக் கொண்டு சோதனை நடத்துவதை இந்தியா ஜனவரி 18-ம்தேதியே தொடங்கியுள்ளது. முதல் நோயாளி உறுதி செய்யப்பட்ட 25 நாட்களுக்கு பின்னர் இத்தாலியிலும், 39 நாட்களுக்கு பின்னர்தான் ஸ்பெயினிலும் விமான நிலையங்களில் சோதனை தொடங்கப்பட்டது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

இதேபோன்று, 30 விமான நிலையங்கள், 12 பெரிய மற்றும் 65 சிறிய துறைமுகங்கள், நில எல்லைகளில் இந்தியா தீவிர சோதனையை நடத்தியது. இதன் அடிப்படையில் மொத்தம் 36 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதுமின்றி மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலையில், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்காக போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவர்கள் கால்நடையாக, குழந்தைகள் இருந்தால் அவர்களையும் தோளில் சுமந்து செல்கின்றனர். 

அத்தியாவசிய தேவையை தவிர்த்து மற்ற எதற்கும் வாகனங்கள் செல்லக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

நிவாரணத் தொகையை மத்திய அரசு அறிவித்த போதிலும், அவை மக்களிடத்தில் முழுமையாக சென்றடையவில்லை. 

இந்த நிலையில்தான் தன்மீதான எதிர்மறை விமர்சனங்களை மத்திய அரசு மறுத்து விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 873-ஆகவும், உயிரிழப்பு 19-ஆகவும் உள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com