This Article is From Feb 05, 2020

நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!!

நெய்வேலியில் நடைபெற்ற மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயிடம் சம்மன் அளித்து விசாரணை நடத்தினார்கள். பிகில் திரைப்படம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது.

நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!!

விஜயின் சாலி கிராமம் மற்றும் நீலாங்கரை வீடுகளில் வருமான வரிச்சோதனை நடைபெறுகிறது.

நடிகர் விஜயின் சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

முன்னதாக இன்று மதியம் வருமான வரித்துறை விசாரணையில் ஆஜராகும்படி நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சம்மன் அளித்தனர். படப்பிடிப்பு தளத்திலிருந்து அதிகாரிகளால் விஜய் அழைத்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

விஜய் இதற்கு முன்பாக பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருந்தது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள இதன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. 

முதலில் படப்பிடிப்பு குழுவினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்கள் விஜயை சந்திக்க அதிகாரிகளுக்கு மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 மணிநேரம் காத்திருந்ததாகவும், அதன்பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் வந்து பேச்சு நடத்திய பின்னர் அதிகரிகள் விஜயை சந்தித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்பின்னர் சுமார் ஒரு மணிநேரம் விஜயிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜயை சென்னை அலுவலகத்திலும் வைத்து விசாரணை நடத்துவதற்கு வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியதை தொடர்ந்து விஜயிடம் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஜி.எஸ். நிறுவனம் மற்றும் மதுரையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் தற்போது விஜயின் சாலிகிராமம் மற்றும் நீலாங்கரை வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

.