நிரவ் மோடியின் கோடீஸ்வர உறவினர் சோக்சிக்கு நெருக்கடி..!

நிரவ் மோடியின் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாருமான மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டின் குடிமகனாக மாறியுள்ளார்

நிரவ் மோடியின் கோடீஸ்வர உறவினர் சோக்சிக்கு நெருக்கடி..!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவிடமிருந்து எங்களுக்கு எந்த கோரிக்கையும் இல்லை, ஆன்டிகுவா
  • ஆன்டிகுவா குடியுரிமை பெறுவது குறித்து நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன
  • கடந்த ஆண்டு நவம்பரில் சோக்சிக்கு ஆன்டிகுவா குடியுரிமை வழங்கப்பட்டது
New Delhi:

நிரவ் மோடியின் உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாருமான மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டின் குடிமகனாக மாறியுள்ளார். இந்நிலையில், பல கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் அவர் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபராக இருந்து வருகிறார். வேறு நாட்டுக் குடியுரிமை வாங்கிவிட்டதால், அவரை ஆன்டிகுவாவிலிருந்து அழைத்து வருவதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த விஷயத்தில் ஆன்டிகுவா அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பஞ்சாப் தேசிய வங்கியிடமிருந்து 13,400 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தார் சிலரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தேடி வருகிறது. நிரவ் மோடியுடன் தேடப்பட்டு வரும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் சோக்சியும் ஒருவர். 2011 ஆம் ஆண்டு முதல் பிஎன்பி வங்கியிடமிருந்து நிரவ் மோடி குடும்பம் கடன் பெற்று மோசடி செய்துள்ளது. அவர்கள் மோசடியில் ஈடுபட்ட விஷயம் இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் தெரியவந்தது. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார் கொடுத்தது பிஎன்பி. ஆனால், அவர்களை கைது செய்து விசாரிப்பதற்கு முன்னரே குடும்பத்தோடு இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டானர். அதன் பிறகு நிரவ் மோடி மற்றும் சோக்சி உள்ளிட்டவர்களின் பாஸ்போர்டுகளையும் இந்திய அரசு முடக்கவிட்டது.

இந்நிலையில் சோக்சி, கரீபியன் தீவுகளில் இருக்கும் ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை கேட்டு கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது ஆன்டிகுவா அரசு, இந்திய அரசிடம் சோக்சி குறித்து விசாரித்துள்ளது. அந்நேரத்தில் சோக்சி மீது எந்த வழக்கும் இல்லாததால், நவம்பர் மாதம் அவருக்கு ஆன்டிகுவா குடியுரிமை வழங்கப்பட்டது. பின்னர், ஜனவரி 15 ஆம் தேதி அவர் ஆன்டிகுவாவின் குடிமகனாக ஆனார். ஜனவரி 29 ஆம் தேதி தான் பிஎன்பி-யில் செய்த பணமோசடி குறித்து தெரியவந்தது. மேலும், ஜனவரி மாதம் இந்தியாவிலிருந்து புறப்பட்ட சோக்சி, தான் அமெரிக்காவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள செல்கிறேன் என்று கூறினார். இதனால், அவரை இந்திய அரசு, கைது செய்து அழைத்து வர முடியாத நிலை உருவாகியுள்ளது.


மேலும், ஆன்டிகுவாவுக்கும் இந்தியாவுக்கும் சரியான உடன்படிக்கை இல்லாத காரணத்தால், சோக்சி அழைத்து வர முடியாது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பேசியுள்ள ஆன்டிகுவாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செத் க்ரீன், ‘சோக்சியை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு, அந்நாட்டிடம் இருந்து ஆன்டிகுவா அரசுக்கு எந்தவித அதிகாரபூர்வ கடிதமும் வரவில்லை. ஒருவேளை அப்படி எங்களிடம் கேட்கப்பட்டால், வேண்டியதைச் செய்வோம். இரு நாடுகளுக்கும் உடன்படிக்கை இல்லை என்பது குறுக்கே நிற்காது. எங்கள் குடியுரிமை திட்டத்தை மதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இது சோக்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் எனப்படுகிறது.

ஆன்டிகுவா குடியுரிமை பெற்றால் உலகில் இருக்கும் 132 நாடுகளுக்கு விசா இல்லாமல் போகலாம் என்ற சட்டம் இருக்கிறது. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அடங்கும்.

இந்நிலையில் ஆன்டிகுவாவில் ஏன் குடியுரிமை வாங்கினேன் என்பதற்கு தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை வெளியிட்ட சோக்சி, ‘எனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் தான் ஆன்டிகுவாவில் நான் குடியுரிமை பெற்றுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்குத் திரும்ப வருவது குறித்து சோக்சி, ‘இந்தியாவுக்கு நான் திரும்ப வரமாட்டேன். என் உயிருக்கு அங்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ என்றுள்ளார்.