This Article is From Apr 19, 2019

தோல்வி பயத்தால் அதிமுகவும், பாஜகவும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது! - திருமாவளவன்

அரியலூர் பொன்பரப்பியில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன் மனு தாக்கல் செய்துள்ளார்.

தோல்வி பயத்தால் அதிமுகவும், பாஜகவும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளது! - திருமாவளவன்

இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வாக்குச் சாவடிகளை கைப்பற்ற வேண்டும் என்று சாதிய வன்முறைகளை தூண்டி விட்டுள்ளனர்.

சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பியில் தலித் மக்களை வாக்களிக்க விடாமல் தடுக்க வன்முறையை நடத்தியுள்ளனர். இந்த வன்முறையில் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

அரசியல் ஆதாயம் தேட அதிமுக மற்றும் பாஜக இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. மேலும் 2 ஆயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதற்கு கள்ள ஓட்டு போட்டது கூட காரணமாக இருக்கலாம். இதனால், பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்.

பாமக போன்ற ஜாதி வெறி கட்சி. பாஜக போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிற வரை சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது. இந்த வன்முறைகளை எல்லாம் தாண்டி நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அவர் கூறினார்.

முன்னதாக பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியிருந்தார்.
 

.