This Article is From Sep 20, 2018

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சைக்கிளுக்கு மாறி வரும் சென்னை நகரம்

பெட்ரோல், டீசல் விலை விவகாரம் வரும் பொதுத் தேர்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சைக்கிளுக்கு மாறி வரும் சென்னை நகரம்

சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் நாகராஜன் தினமும் தனது அலுவலத்திற்கு சைக்கிளில் செல்கிறார்.

Chennai:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு (Fuel price hike) ஏழை மக்களை மட்டும்தான் பாதித்துள்ளது என்று நீங்கள் எண்ண வேண்டாம். கார் வைத்திருப்பவர்களும் அதனை விட்டு விட்டு சைக்கிளுக்கு மாறத் தொடங்கும் நிலையை சென்னையில் இப்போது பார்க்க முடிகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் இந்த நிலைமைக் காரணம். சிலர் தங்களது பயணத்திற்காக மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நாகராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கார் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக அதனை அவர் பயன்படுத்தவில்லை. இதற்கு பதிலாக 20 கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்து தினமும் தனது அலுவலகத்திற்கு செல்கிறார்.

என்.டி.டி.விக்கு அவர் அளித்த பேட்டியில், சிறிய தொகையை தொடர்ச்சியாக சேமிக்கும்போது அது பெரிய தொகையாக மாறும். நான் ஆண்டுக்கு 800 லிட்டர் பெட்ரோல் போடுகிறேன். லிட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து விட்டது. இப்போது காரை நிறுத்தி விட்டு சைக்கிளில் செல்வதன் மூலம் எனது மகளின் எதிர்காலத்திற்கு குறிப்பிட்ட பணத்தை சேமிக்க முடியும்.

எரிபொருள் விலை உயர்வு, போக்குவரத்து நெரிசலால் மைலேஜ் குறைவு ஆகியவை எனது செலவை அதிகப்படுத்துகின்றன. போக்குவரத்து சேவையை அரசு இன்னும் சரி செய்ய வேண்டும். எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்றார்.
டீசல் விலை உயர்வு வாழ்வாதாரத்தை பாதித்து விட்டதாக மீனவர்கள் புலம்புகின்றனர். ராமேஸ்வரத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து 800 படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. டீசலுக்கு மானியம் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னையில் மீனவர் சங்க தலைவர் தென்னரசு அளித்த பேட்டியில், “டீசலுக்கு மானியம் கிடைத்தால்தான் மீன்பிடி தொழில் செய்ய முடியும்” என்றார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவைதான் எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என மத்திய அரசு கூறி வருகிறது. எரிபொருளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. தமிழக அரசும் எரிபொருள் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒப்பந்ததாரரான ரவிகுமார் கந்தசாமி கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் முக்கிய பிரச்னையாக இருக்கும். மக்கள் கடுங்கோபத்தில் உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள அரசுகூட எரிபொருள் மீதான வரியை குறைத்து விட்டது. ஆனால் மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் இந்த பிரச்னை எதிரொலிக்கும் என்றார்.

.