This Article is From Mar 23, 2019

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி அனுப்பிய முக்கிய செய்தி!

பாகிஸ்தான், அதன் தேசிய தினத்தை இன்று கொண்டாடுகிறது

டெல்லியில் இருக்கும் அந்நாட்டின் தூதரகத்தில் தேசிய தினத்தை கொண்டாடும் விதத்தில் நேற்று மாலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

ஹைலைட்ஸ்

  • லாகூர் தீர்மானத்தை போற்றும் வகையில் பாக். தேசிய தினம் கொண்டாடப்படுகிறது
  • பிதரமர் மோடி செய்தி அனுப்பியுள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார்
  • பாக். தேசிய தின கொண்டாட்டத்துக்கு இந்தியா பிரதிநிதிகளை அனுப்பவில்லை
New Delhi:

இந்தியா பாகிஸ்தான் இடையில் வரலாறு காணாத அளவில் பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, முக்கிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அமைதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி என்னிடம் தெரிவித்துள்ளார்' என்று பதிவிட்டுள்ளார். 

அவர் மேலும், ‘பிரதமர் மோடி என்னிடம், ‘பாகிஸ்தானின் தேசிய தினத்தன்று நாட்டு மக்களுக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தைக் காப்பாற்றவும், அமைதியை நிலைநாட்டவும், வளர்ச்சியை முன்னெடுக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது' என்று கூறியுள்ளார். 

பிரதமர் மோடி அனுப்பியுள்ள செய்தியை நான் வரவேற்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்பட வேண்டும். குறிப்பாக, காஷ்மீர் விவகாரம்' என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான், அதன் தேசிய தினத்தை இன்று கொண்டாடுகிறது. அதே நேரத்தில் டெல்லியில் இருக்கும் அந்நாட்டின் தூதரகத்தில் இதை கொண்டாடும் விதத்தில் நேற்று மாலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்ததால், இந்திய தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. 

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ரவீஷ் குமார், ‘பாகிஸ்தான் தூதரகம் ஹூரியத் தலைவர்களை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, இந்திய தரப்பில் யாரும் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஹூரியத் தலைவர்களுடன் பாகிஸ்தானோ, பாகிஸ்தான் தூதரகமோ நட்பு பாராட்டினால் அதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என்று தெரிவத்துள்ளார். 

பல பிரிவினைவாதத் தலைவர்கள்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையானோர் நேற்றைய நிகழ்ச்சியல் பங்கேற்கவில்லை. காரணம், பல பிரிவினைவாதத் தலைவர்கள் சிறையிலோ அல்லது வீட்டுக் காவலிலோ இருக்கின்றனர். குறிப்பாக இந்திய அரசு, சென்ற மாதம் எடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகு பலருக்கு முடக்கு போடப்பட்டுள்ளன. 

காஷ்மீர் மனித உரிமை செயற்பாட்டாளர் முகமது அசான், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக வந்தபோது கைது செய்யப்பட்டார். 

இந்த ஆண்டுக்கு முன்னர், பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சிக்கு இந்திய அரசு, ஒரு அமைச்சரை மரியாதை நிமித்தமாக அனுப்பி வைத்தது. அப்போதும் பிரிவினைவாதத் தலைவர்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. 

கடந்த மாதம் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமாவில் ஜெய்ஷ் - இ- முகமது அமைப்பு தீவிரவாத தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் துணை ராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, எல்லைத் தாண்டி பாகிஸ்தான் பாலகோட்டில் இருக்கும் ஜெய்ஷ் அமைப்பின் தீவிரவாத முகாம் மீது குண்டு போட்டுத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

பின்னர் பாகிஸ்தான் தரப்பு, இந்திய ராணுவத்தின் ராணுவ முகாம்களை வான் வழியாக தாக்கப் பார்ததது. இதற்கு இந்திய தரப்பிலிருந்து பதில் தாக்குதல் தொடுக்க முயன்றபோது ஏர் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமன் பாகிஸ்தான் பிடியில் சிக்கினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அந்த சம்பவத்திலிருந்து பாகிஸ்தான் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது இந்தியா. 

(ஏஜென்சி தகவல்களுடன்)

.