This Article is From Jun 17, 2020

இணையவழி ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்

17 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாச்சாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன.

இணையவழி ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்

இணையவழி ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்

இணையவழி ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், இணையவழி சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால், அவை மிகப்பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாத நிலையில், அவர்களை குறி வைத்து இணையவழி சூதாட்டதளங்கள் படையெடுத்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும் காலையில் செல்பேசியை திறந்தவுடனேயே, 'இன்றைய அறிமுக ஊக்கத்தொகையாக ரூ.10ஆயிரம் + 2,000 வழங்குகிறோம். அதைக் கொண்டு ஆன்லைன் ரம்மி ஆட்டத்தைத் தொடங்குங்கள். லட்சக்கணக்கில் வெல்லுங்கள்' என்ற செய்தி வருகிறது.

வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட வெறுமை ஒருபுறம், இணையவழி ரம்மி ஆடி லட்சக்கணக்கில் சம்பாதித்தால் அது வருமானம் இல்லாத காலத்தில் உதவியாக இருக்குமே என்ற ஆசை ஒருபுறம் என இரண்டும் சேர்த்து இணையவழி ரம்மிக்கு இளைஞர்களை அடிமையாக்குகின்றன.

அறிமுக ஊக்கத்தொகையாக இணையவழி ரம்மி நிறுவனம் கொடுக்கும் பணம் சில நிமிடங்களில் கரைந்து விடும். அதன்பின் அந்த இளைஞர்கள் தங்களிடம் உள்ள சிறிய அளவு சேமிப்பைக் கொண்டு இணையவழி ரம்மி எனும் சூதாட்டத்தைத் தொடருவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் சேமிப்புகள் முழுவதுமாக கரைந்து விடும்.

அதற்கு அடுத்த நாட்களில் அந்த இளைஞர்களை எவரும் தூண்டத் தேவையில்லை. மாறாக, காலையில் எழுந்தவுடனேயே நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு, கடன் வாங்கிச் சூதாடுவார்கள்; எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அதை முழுமையாக இழப்பர். காரணம்... இணையவழி ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களே அப்படித் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.

17 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாச்சாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. பாமக தான் தொடர்ச்சியான போராட்டங்களால் அந்தக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டியது. அதேபோல், இப்போது ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.

எனவே, புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின்படியோ இணையவழி ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

.