This Article is From Aug 11, 2018

2 கோடி ரூபாய் செலவில் ஆசிரியர் பெயரில் வகுப்பறை, நெகிழ்வித்த முன்னாள் மாணவர்கள்

பெங்களூர் ஐஐஎம் முன்னாள் மாணவர்கள் L-11 வகுப்பறையை தங்கள் ஆசிரியர் வத்சலா நாகராஜனுக்கு அர்ப்பணித்து அவர் பெயரைச் சூட்டியுள்ளனர்

2 கோடி ரூபாய் செலவில் ஆசிரியர் பெயரில் வகுப்பறை, நெகிழ்வித்த முன்னாள் மாணவர்கள்
Bengaluru:

குரு பூர்ணிமா அன்று நெஞ்சை நெகிழச் செய்யும் விதமாக, பெங்களூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தமது ஆசிரியர் பெயரில் வகுப்பறையைக் கட்டித்தந்து முன்னாள் மாணவர்கள் அர்ப்பணித்துள்ளனர்.

ராகுல் சுக்லா, பிரசாந்த் ஜெயின், ஆஷிஷ் பார்த்தசாரதி ஆகிய முன்னாள் மாணவர்கள் பலரும் தற்போது வங்கி, நிதித்துறைகளில் உயர்பதவிகளை வகிக்கின்றனர். இவர்களுடன் 1991,1992ம் ஆண்டு பயின்ற பல மாணவர்களும் இணைந்து இச்செயலை முன்னெடுத்துள்ளனர்.

IIM-B வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆசிரியரில் பெயரில் வகுப்பறை அமைய உள்ளது என்ற அதன் இயக்குநர் பேரா. ரகுராம், 'இச்செயல் மேலும் இதுபோன்ற பல நல்ல முன்னுடுப்புகள் நடக்க வழிவகுக்கும்' என்றும் கூறினார்.

1974ம் ஆண்டு பிப்ரவரி 1 நிதியியல் பிரிவில் பேரா. வத்சலா நாகராஜன் பணியில் இணைந்தார். 1991 ஏப்ரல் முதல் 1992 செப்டம்பரில் ஓய்வு பெறும் வரை புலமுதன்மையராக இருந்தார். சிறந்த ஆசிரியர், நண்பர், வழிகாட்டி, நலன்விரும்பியாக அவர் மாணவர்களுக்கு விளங்கினார். எந்நேரமும் மாணவர்களுக்கு உதவியாகவும் ஆதரவாகவும் நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பவராகவும் அவர் இருந்தார் என்று IIMB நிர்வாகம் தெரிவித்துள்ளது. பலரும் பேரா. வத்சலா எப்படித் தாங்கள் வாழ்க்கையில் முன்னேறியதில் அவர் பங்கு வகித்தார் என்று பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்குத் தன் கணவருடன் வந்திருந்த பேரா. வத்சலா நாகராஜன், "தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்தால் பெற்றோர் மகிழ்வார்கள். அதுபோலவே எனது மாணவச்செல்வங்களைக் கண்டு நானும் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். அவர்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்த துறையில் வெற்றியடைந்துள்ளதற்காக மட்டுமின்றி நல்ல இதயம் படைத்த மனிதர்களாக இருப்பதாலும் நான் பெருமிதம் அடைகிறேன்" என்று பேசினார்.

நிகழ்ச்சியில், தனது மாணவர்கள், சக ஆசிரியர்கள், நண்பர்கள், தோழர்களுடனான பேரா. வத்சலா அவர்களின் நினைவுகளை வெளிப்படுத்தும் சிறப்பு நூலை IIMB வெளியிட்டது.

 

.