This Article is From Feb 12, 2019

டிக் டாக்கை தடை செய்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான் தான்! - தமிழிசை

டிக் டாக்கை தடை செய்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாக தான் இருப்பேன் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

டிக் டாக்கை தடை செய்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நான் தான்! - தமிழிசை

தமிழகத்தில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் இந்த செயலியை இளைஞர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த நிலையில், நாளடைவில் இந்த செயலி அனைத்து வயதினரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது. ஒரு பாடலையோ, திரைப்பட டயலாக்குகளையோ, அல்லது பின்னணி இசையையோ பின்னால் ஓடவிட்டு, அதற்கு ஏற்றவாறு நடனமாடுவதும், வசனம் பேசுவதும், நடித்து காட்டுவதும் என செய்து வருகின்றனர். அண்மையில் இதில் ஆபாச காட்சிகள் அதிகம் பரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துவந்தது.

இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, பல்வேறு ஆபாச செயலுக்கும், சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மணிகண்டன், புளுவேல் கேமை போன்று டிக் டாக் செயிலியும் தடைசெய்ய கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அவர் உறுதியளித்தார்.

இந்நிலையில், இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பியபோது, டிக் டாக் செயலியை தடை செய்தால் மகிழ்ச்சியடையும் முதல் நபர் நானாக தான் இருப்பேன்.

ஏனென்றால், அதிகம் பேர் எங்களை தான் கேலி செய்து கொண்டிருக்கின்றனர். வரம்பு மீறி போகிறது. அது ஒரு விளையாட்டாக, விருப்பமாக இருப்பதற்கு, சந்தோஷப்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயலி தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறது. எனவே டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டால் அதனை நாங்களும் வரவேற்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.


 

.