This Article is From Mar 02, 2020

ரஜினியும்-கமலும் இணைந்தால்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!

ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினியும் கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

ரஜினியும்-கமலும் இணைந்தால்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!!

ரஜினியும் கமலும் அவர்களின் கொள்கை - லட்சியத்தைச் சொல்லட்டும்

ஹைலைட்ஸ்

  • ரஜினியும் கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
  • சிஏஏ சட்டத்தால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை.
  • எங்களின் வாக்கு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது

ரஜினியும் - கமலும் இணைந்தால் '16 வயதினிலே' மாதிரி நல்ல படம் கிடைக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, சிறுபான்மையின மக்களின் முழு இதயத்துடிப்பாக தமிழக அரசும் அதிமுகவும் இருக்கிறது. அதனால் முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு 100 சதவீதத்துக்கும் மேல் தமிழக அரசு பாதுகாப்பை உறுதி செய்கிறது.

சிஏஏ சட்டத்தால் முஸ்லிம்களுக்குப் பாதிப்பில்லை. அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என தெளிவுபடுத்தியிருக்கிறோம். முஸ்லிம் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு, போராட்டத்தைக் கைவிட்டு சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் என்றார்.

தொடர்ந்து அவரிடம் அரசியலில் ரஜினி-கமல் இணைந்து செயல்படுவார்கள் என்ற பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினியும் கமலும் இணைந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 

திமுக என்கிற குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து எம்ஜிஆர் கட்சி தொடங்கினார். தலைவருக்குப் பிறகு கட்சி அழிந்துவிடும் என்றனர். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு இரண்டாகப் பிரிந்த கட்சியை ஒன்றாக்கி, ஜெயலலிதா கட்சியின் தொண்டர்களை ஒன்றரை கோடியாக உயர்த்தினார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஆட்சி நிலைக்காது என்றனர். ஆனால், நல்லாட்சி தொடர்கிறது. 

2021 தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவர். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவுக்குக் கட்சி உச்சத்தில் இருக்கிறது. ரஜினியும் கமலும் அவர்களின் கொள்கை - லட்சியத்தைச் சொல்லட்டும்.

ஆனால், எங்களின் வாக்கு வங்கியில் யாரும் கை வைக்க முடியாது. மீண்டும் அவர்கள் இணைந்தால், '16 வயதினிலே' மாதிரி நல்ல படம் கிடைக்கலாம் என்று அவர் கூறினார்.
 

.