This Article is From Sep 18, 2018

‘கருணாநிதிக்கு மெரினா கிடைக்க நாங்கள் தான் காரணம்!’- அமைச்சர் கடம்பூர் ராஜு

கருணாநிதியின்(Karunanidhi) உடல் அண்ணா நினைவிடத்துக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டதற்கு நாங்கள் நீட்டிய உதவிக்கரம் தான் காரணம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

‘கருணாநிதிக்கு மெரினா கிடைக்க நாங்கள் தான் காரணம்!’- அமைச்சர் கடம்பூர் ராஜு

மறைந்த முதல்வர் கருணாநிதியின் (Karunanidhi ) உடல், பலகட்ட பிரச்னைகளுக்கு பிறகு மெரினா கடற்கரையில் இருக்கும் அண்ணா நினைவிடம் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி மறைந்த பிறகு, அண்ணா நினைவிடம் பக்கத்தில் அடக்கம் செய்ய, அவரது மகனும் திமுக-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தார். அப்போது முதல்வர், ‘பல சட்ட சிக்கல் இருக்கிறது. பார்க்கலாம்’ என்று மட்டும் பதில் கூறி அனுப்பினார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில், ‘மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட முடியாது. அவருக்கு கிண்டியில் இடம் ஒதுக்கப்படும்’ என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து திமுக தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று போடப்பட்டது. அந்த வழக்கு உடனடியாக விசாரிக்கப்பட்டு, ‘மெரினாவில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய எந்தத் தடையும் இல்லை’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து தான் முழு அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘அண்ணா நினைவிடத்துக்கு அருகில் கருணாநிதிக்கு உயர் நீதிமன்றம் இடம் வழங்கிய போது, நாங்கள் அது குறித்து மேல் முறையீடு செய்யாமல் பெருந்தன்மையுடன் அமைதி காத்தோம். கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்துக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு நாங்கள் நீட்டிய உதவிக்கரம் தான் காரணம்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

.