“மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை” நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி…

மக்கள் முடிவு எடுப்பார்கள் என்று முன்னதாக கூறியிருந்தேன். அதுதான் நடந்திருக்கிறது

“மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை” நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி…

“மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் தொடக்கம் முதலே பாஜக பெரும் முன்னிலையில் இருந்து வருகிறது. தொடர்து 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதன் மூலம் கடந்த 2014ல் பாஜக பெற்ற வெற்றியை காட்டிலும் இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக பெறும் வெற்றி பெற உள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ 100 தொகுதிகளை பெறவே கடும் போட்டியை எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து 90 தொகுதிகளில் அதுவும் குறைந்த பட்ச வாக்குகள் வித்தியாசத்திலே முன்னிலை வகித்து வருகிறது. இதேபோல், ராகுலின் சொந்த தொகுதியான அமேதியிலும் ராகுல் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில்,செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது,

“மக்கள் முடிவு எடுப்பார்கள் என்று முன்னதாக கூறியிருந்தேன். அதுதான் நடந்திருக்கிறது. மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவதை மதிக்கிறேன். என்மீது தவறான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீது நான் அன்பை செலுத்தவே விரும்புகிறேன். 

பதவி ஏற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார். 

அப்போது செய்தியாளர்கள் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு,

“அதை கட்சி பொதுக்குழுதான் முடிவு செய்யும்” என்று பதிலளித்தார். மேலும், அமேதி தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் ஸ்மருதி இரானிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.