This Article is From Jul 03, 2019

ஹைட்ரோகார்பன் விவகாரம்: பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்!

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக சட்டசபையில் இன்று திமுக - அதிமுக இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

ஹைட்ரோகார்பன் விவகாரம்: பேரவையில் திமுக - அதிமுக காரசார விவாதம்!

தமிழகத்தின் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. 

கடும் எதிர்ப்பு நிலவி வரும் இந்த சூழ்நிலையிலும், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், முதற்கட்ட பணியாக 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அமைக்கும் பணியை தொடங்கலாம் எனவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வன்மையாக கண்டித்து வரும் நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கூடுதலாக பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் திமுக சார்பில் கொண்டு வரப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான எந்தத் திட்டத்துக்கும் எந்தக் காலத்திலும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

மேலும், மத்திய அரசே அனுமதி அளித்தாலும் தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்க திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியையே அதிமுகதான் ரத்து செய்தது என்று கூறிய அவர், இந்த விஷயத்தில் திமுக மக்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்தார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த திமுக ஆட்சியின்போது அனுமதி தரவில்லை என்றும், ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளித்ததாகவும் கூறினார்.

திமுக ஆட்சியில் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதிமுக மீண்டும் மீண்டும் பொய் பிரசாரம் செய்வதாகவும் டி.ஆர்.பி ராஜா பேசினார். இந்த காரசார விவாதம் காரணமாக சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 


 

.