This Article is From Nov 21, 2018

’48 மணி நேரத்தில் பதவி விலகுங்கள்!’- பாரிக்கருக்கு எதிராக பிரமாண்ட பேரணி

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை, முதல்வரின் வீட்டின் 100 மீட்டருக்கு முன்னாலேயே தடுத்து நிறுத்தினர் போலீஸ்

’48 மணி நேரத்தில் பதவி விலகுங்கள்!’- பாரிக்கருக்கு எதிராக பிரமாண்ட பேரணி

சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பேரணியை ஒருங்கிணைத்தன

ஹைலைட்ஸ்

  • மனோகருக்கு 48 மணி நேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
  • எங்களுக்கு முழு நேர முதல்வர் வேண்டும், போராட்டக்காரர்கள்
  • பாரிக்கருக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு வாய்ப்பு
Panaji:

நேற்று மாலை காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள், கோவா மாநில முதல்வர் வீட்டுக்குப் பேரணியாக சென்றுள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வரும் அவரை பதவி விலகக் கோரி இந்தப் பேரணி நடந்தது.

‘அரசு இயந்திரத்தை மீட்க மக்கள் பேரணி' என்ற குடையின் கீழ் ஒருங்கிணைந்தவர்கள் இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்த இந்தப் பேரணியின் முக்கிய நோக்கம், '48 மணி நேரத்தில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் பதவி விலக வேண்டும்' என்பது தான்.

சமூக செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைத்த இந்த பேரணிக்கு காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‘கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக மனோகர் பாரிக்கர், உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனால் கோவாவின் அரசின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என்று கோரினர்.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணியை, முதல்வரின் வீட்டின் 100 மீட்டருக்கு முன்னாலேயே தடுத்து நிறுத்தினர் போலீஸ்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பில் பேசிய சமூக செயற்பாட்டாளர் ஏர்ஸ் ரோட்ரிகஸ், ‘பாரிக்கர் பதவி விலக 48 மணி நேரம் தருகிறோம். எங்களுக்கு முழு நேர முதல்வர் வேண்டும். கடந்த 9 மாதங்களாக அரசு கட்டுமானம் முழுவதும் குழம்பியுள்ளது. முதல்வர் உடல் நலக் குறைவு காரணமாக, அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ-க்களையே பார்க்க மறுத்து வருகிறார். அடுத்த 48 மணி நேரத்தில் முதல்வர் பதவி விலகவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

புது டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு பாரிக்கர், கோவாவில் இருக்கும் அவரது வீட்டில் தான் ஓய்வெடுத்து வருகிறார். அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அவர் அங்கு தான் வசித்து வருகிறார். மாநில சுகாதாரத் துறை அமைச்சர், பாரிக்கரின் ஆரோக்கியம் குறித்து முன்னர் பேசியபோது, ‘முதல்வருக்கும் கணையப் புற்று நோய் உள்ளது' என்று தகவல் தெரிவித்தார்.

.