டிப்ஸாக வந்த 25 லட்ச ரூபாய்..!- போலீஸிடம் ஒப்படைத்த ஹானஸ்ட் ஓட்டல் சர்வர்

வாடிக்கையாளர்கள் பொருட்களை விட்டுச்செல்வதும், அதனை திரும்பப் பெற வருவதும் வழக்கமாக நடக்கும் செயல்

டிப்ஸாக வந்த 25 லட்ச ரூபாய்..!- போலீஸிடம் ஒப்படைத்த ஹானஸ்ட் ஓட்டல் சர்வர்

ஹைலைட்ஸ்

  • சென்னை, அண்ணா நகரில் உள்ள சரவணபவனில் சர்வராக இருக்கிறார் ரவி
  • 20 ஆண்டுகளாக இந்த வேலையைப் பார்த்து வருகிறார் ரவி
  • அவருக்கு போலீஸ் தரப்பிலிருந்து சன்மானம் கொடுக்கப்பட்டுள்ளது
பரபரப்பான காலை நேரத்தில், கூட்டம் நிறைந்து காணப்பட்ட சென்னை அண்ணா நகர் சரவண பவனில், உணவருந்த வந்த ஒருவர், ஹோட்டல் பணியாளரை பார்த்து “உங்களை டி.வில பார்த்தன். எல்லோருக்கும் முன் உதாரணமா இருக்கீங்க” என்று பாராட்டியபடி, “ஒரு ‘செல்ஃபி’ எடுத்துகிறேன்” என கேட்டு கொண்டிருந்தார்.

ஹோட்டலில் இருந்த ஊழியர் ஒருவர், “ரவி ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டாரு. அவர் நேர்மைக்கு கிடைச்ச பரிசுதான் இதெல்லம்” என்று சொன்னபடி ஆர்டர் எடுத்துக் கொண்டு இருந்தார். விவரம் என்னவென்றால், தவறுதலாக விட்டுச்சென்ற 25 லட்ச ரூபாய் பணப்பையை, காவல் துறையினரிடம் ஒப்படைத்த சென்னை அண்ணா நகர் சரவண பவன் ஹோட்டல் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில், ஹோட்டல் பணியாளர் ரவி, மேஜைகளை சுத்தம் செய்யும் போது, சோஃபாவில் ஒரு பாலித்தீன் கவரில் கட்டுகட்டாக புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் இருப்பதை பார்த்து, உடனே அதை கொண்டு சென்று ஹோட்டல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் எண்ணிப் பார்க்கையில், 25 லட்சம் ரூபாய் பணம் இருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே, விட்டுச்சென்ற பணத்தை எடுத்துச்செல்ல வாடிக்கையாளர்கள் வருவரா என்று மாலை வரை காத்திருந்தனர் அதிகாரிகள். பணப்பையை விட்டுச்சென்றவர்கள் பணத்தை கேட்டு மீண்டும் வராததால், ஹோட்டலின் உதவி பொது மேலாளர் பாலு, அண்ணா நகர் கே-4 காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காவல் துறை ஆய்வாளர் சரவணன் ஹோட்டலுக்குச் சென்று விசாரித்துள்ளார்.

“காவல் துறையினரின் விசாரணையின் போது, நடந்த விவரங்களை கூறினோம். சிசிடிவி மூலம் காண்கையில், காலை 10 மணி அளவில், இரண்டு நபர்கள் உணவு அருந்திவிட்டு பணப்பையை விட்டுச்சென்றுள்ளனர். எனவே, 25 லட்சம் ரூபாயை காவல் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்று ஹோட்டல் மேலாளர் லோகநாதன் கூறினார். அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அதிகாரிகளிடம் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி, நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்ட ஹோட்டல் பணியாளர் ரவிக்கு காவல் துறையினர் சார்பில், டைடன் கைகடிகாரம் பரிசளிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு பல பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

38 வயதான ரவி, ஹோட்டல் சரவண பவனில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். துறையூர் செல்லிப்பாளையத்தைச் சொந்த ஊராக கொண்டவர் ரவி, பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது சென்னை பெரியார் நகரில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். மனைவி மென்பொறியாளராகவும், ஏழாவது மற்றும் ஒன்றாம் வகுப்பில் படிக்கும் இரண்டு மகன்களும் இவருக்கு உள்ளனர். வீட்டில் கண்டிப்பான தந்தையாக இருக்கும் ரவி, எடுத்த பொருட்களை அதே இடத்தில் வைக்கவும், வீட்டை சுத்தமாக வைக்கவும் தன் குழந்தைகளிடம் கூறிக்கொண்டே இருப்பார் என தெரிவித்தார். வீட்டில் உள்ள போது, எதையாவது கீழே கண்டால் அதனை அம்மாவிடம் ஒப்படைக்குமாறும் குழந்தைகளிடம் கூறுவாராம். அப்படி இருக்கும் ரவி, 25 லட்சம் ரூபாய் பணப்பையை கண்டவுடன், தன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தது அவரது நேர்மையை உணர்த்துகிறது.

“வாடிக்கையாளர்கள் பொருட்களை விட்டுச்செல்வதும், அதனை திரும்பப் பெற வருவதும் வழக்கமாக நடக்கும் செயல். பெரும்பாலும், மொபைல் போன்கள், பண பர்சுகள் விட்டுச் செல்வார்கள். ஹோட்டலுக்குள் எதை கண்டாலும், அதனை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம். எனவே, இந்த முறை நான் கண்ட பணப்பையையும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டேன்” என்றார் ரவி. பணப்பையை கண்டவுடன், உங்கள் மனதில் தோன்றியது என்ன? என்று கேட்ட கேள்விக்கு, “இத்தனை ஆண்டுகளாக இந்த வேலையில் பணியாற்றி வருவதில், உண்மைக்கு மாறுபட்டு செய்ய எதுவும் இல்லை” என்று எளிமையாக முடித்து கொண்டார். ரவியின் நேர்மையை பாராட்டி, ஹோட்டல் சரவண பவன் உரிமையாளர் திரு.ராஜகோபால், ஒரு பவுன் தங்க மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் ரவியை தனது அலுவலகத்திற்கு அழைத்து, 3000 ரூபாய் பரிசளித்து பாராட்டியுள்ளார். நற்செயல்கள் செய்பவர்களுக்கு, பாராட்டுகளும் பரிசுகளும் என்றைக்கும் கிடைக்கத் தவறுவதில்லை. ஆனால், அதைவிட பெரிதான மகிழ்ச்சி, இதனைப் பார்த்து பிறர் பின்பற்றுவதிலேயே உள்ளது.

 Click for more trending news