This Article is From Nov 15, 2018

‘காஷ்மீர் குறித்து அப்ரீடி சொன்னது சரிதான்!’- ராஜ்நாத் சிங் கருத்து

இங்கிலாந்துக்கு சென்ற பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்

‘காஷ்மீர் குறித்து அப்ரீடி சொன்னது சரிதான்!’- ராஜ்நாத் சிங் கருத்து

ராய்பூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ராஜ்நாத் சிங், தனது கருத்தைத் தெரிவித்தார்.

New Delhi:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி, காஷ்மீர் குறித்து கூறிய கருத்தை ஆமோதித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இங்கிலாந்துக்கு சென்ற பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அஃப்ரிடி பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஜம்மு காஷ்மீர் தொடர்பாக அப்ரீடி பேசியதாவது-

‘காஷ்மீரை பெறுவதில் பாகிஸ்தானுக்கு விருப்பம் இல்லை. அதே சமயத்தில் விட்டுக் கொடுப்பதற்கும் மனம் இல்லை. காஷ்மீர் சுதந்திரமாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மனிதத் தன்மையாவது அங்கு உயிருடன் இருக்க வேண்டும். காஷ்மீர் மக்கள் உயிரிழக்கக் கூடாது. ஜம்மூ காஷ்மீரை பாகிஸ்தான் விரும்பவில்லை. எங்கள் நாட்டு அரசால் இங்கு இருக்கும் 4 மாகாணங்களைக் கூட ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாது. காஷ்மீரில் மக்கள் உயிரிழப்பதை பார்க்கும்போது எங்கள் மனம் வலிக்கிறது. எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்தாலும் அது வேதனைதான்' என்று கூறினார்.

இது குறித்து பேசிய ராஜ்நாத் சிங், ‘அப்ரீடி சொன்னது சரி தான். பாகிஸ்தானால், அவர்கள் நாட்டில் இருக்கும் மாகாணங்களையே நிர்வகிக்க முடியவில்லை. பிறகு எப்படி காஷ்மீரை நிர்வகிப்பார்கள். காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் பகுதியாகத் தான் இருந்தது. அப்படியே தான் இருக்கும்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் அப்ரீடி, ‘காஷ்மீரில் தற்போது நிலவி வரும் வன்முறைச் சூழல் மிகவும் கவலையளிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்' என்று கருத்து தெரிவித்தார்.

mrmg45g

அதற்கு முன்னர், ‘காஷ்மீரில் இருக்கும் பெரும்பான்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தான் விருப்பத்திற்குரியவர்களாக இருக்கின்றனர்' என்று கூறியிருந்தார்.

காஷ்மீர் குறித்து அப்ரீடி கூறிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘நான் கூறிய கருத்தை இந்திய ஊடகங்கள் தவறான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். என் நாட்டின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. காஷ்மீரிகளின் போராட்டங்களையும் நான் மதிக்கிறேன். மனிதம் தழைக்க வேண்டும். உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

.