This Article is From Nov 20, 2019

''தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்'' - அமித் ஷா உறுதி!!

கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, 'சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை அதிக எண்ணிக்கையில் வைத்துக் கொண்டு ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது' என்று குறிப்பிட்டார். 

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

New Delhi:

அசாமில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விமர்சனங்களை உண்டாக்கிய தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா கூறுகையில், 'நாடு முழுவதும் குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும். எந்த மதத்தை சேர்ந்தவரும் இதற்காக கவலைப்பட வேண்டாம். இது ஒரு நடவடிக்கை மட்டுமே.  அனைவரையும் குடிமக்கள் பட்டியலின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கிறோம். 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிதான் அசாமில் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனை நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும்.' என்றார். 

அசாமில் நடத்தப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பின்போது 19 லட்சம்பேரின் பெயர்கள் விடுபட்டன. இவர்களில் பெரும்பாலானோர் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் தோல்வி அடைந்ததால் அவர்களின் பெயர்கள் விடுபட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 

விடுபட்டவர்கள் உடனடியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தவர்கள் என அறிவிக்கப்பட மாட்டார்கள் என்றும், ஆவணங்களை அளிப்பதற்கு அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அமித் ஷா, 'சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை அதிக எண்ணிக்கையில் வைத்துக் கொண்டு ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது' என்று குறிப்பிட்டார். 

.