This Article is From Dec 04, 2019

'சிவசேனாவுடன் கூட்டணி வைப்போம் என நினைத்துக்கூட பார்க்கவில்லை' - NDTVக்கு சரத்பவார் பேட்டி

பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு பெரிய அளவில் இருந்தது. சிவசேனா அதிருப்தியில் இருப்பதை வைத்து நான் இதனை உணர்ந்தேன். ஆனால், கூட்டணி உடையும் அளவுக்கு செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் சரத் பவார்.

NDTVக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

New Delhi:

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என நினைத்துக்கூட பார்க்கவிலை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். 

NDTVக்கு அளித்துள்ள பேட்டியில் சரத் பவார் கூறியதாவது-

மகாராஷ்டிராவில் ஆட்சியைமப்பது தொடர்பாக எனக்கும் காங்கிரசுக்கும் இடையே விவாதம் சூடாக நடைபெற்றது. நான் கோபப்பட்டு கூட்டத்தை விட்டு எழுந்து சென்றுவிட்டேன். எனது கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லலாம் என்றனர்.

அஜித் பவாரும் காங்கிரசின் நடவடிக்கை குறித்து அதிருப்தி அடைந்தார். தேவேந்திர பட்னாவீசுடன் அஜித் பவார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அஜித்தை துணை முதல்வராக நியமிப்பார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. 

எம்.எல்.ஏ.க்கள் அன்றைக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டபோது, எனது சம்மதத்தின்பேரில் தான் நிகழ்ச்சி நடப்பதாக கருதியிருந்தனர். ஆனால் தேவேந்திர பட்னாவீஸ் வந்தபோது, அங்கிருந்த எம்.எல்.ஏக்கள் ஓட்டம்பிடித்து என்னிடம் வந்து, அங்கு என்ன நடக்கிறது என்பதுபற்றி என்னிடம் தெரிவித்தார்கள். 

சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்போம் என்று நான் ஒருக்காலும் நினைத்துப் பார்க்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக சிவசேனாவுடன் கூட்டணி குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு பெரிய அளவில் இருந்தது. சிவசேனா அதிருப்தியில் இருப்பதை வைத்து நான் இதனை உணர்ந்தேன். ஆனால், கூட்டணி உடையும் அளவுக்கு செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை.

பாஜக எனக்கு குடியரசு தலைவர் பதவி அளிக்கப்போவதாக வந்த தகவல்கள் எல்லாம் பொய்யானவை. பாஜகவை காட்டிலும், சிவசேனாவுடன் சேர்ந்து பணியாற்றுவது என்பது லேசான வேலை.

அஜித் பவார் செய்தது முற்றிலும் தவறு. கட்சியில் உள்ள எவரும் அதனை ஏற்கவில்லை. இந்த தவற்றை அஜித் உணர்ந்துள்ளார். மீண்டும் அவர் இதுபோன்று செய்யமாட்டார். தனது குற்றச் செயலால் அவர் பொறுப்புக்கு வரவில்லை. 

சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்யும். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

.