This Article is From Apr 22, 2019

இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் நடந்த தாக்குதலின்போது சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கடலோர காவல்படை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்
  • கடலோர காவல் படை உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு ஏற்பாடுகள் தீவிரம்
  • விமானம் மூலம் ரோந்து பணிகள் நடைபெறுகின்றன.
New Delhi:

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஈஸ்டர் தினமான நேற்று இலங்கையில் நடந்த தாக்குதலின்போது சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அங்கு தாக்குதல் நடத்தியவர்கள் இந்தியாவிலும் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏ.என்.ஐ. நிறுவனம் அளித்திருக்கும் தகவலின் அடிப்படையில், இந்திய கடல் எல்லையில் கப்பல்களும், டார்னியர் ரக விமானங்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்தியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்ற அடிப்படையில் இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2008 மும்பை தாக்குதலின்போது தீவிரவாதிகள் கடல் எல்லை வழியாகத்தான் இந்தியாவுக்குள் புகுந்தனர். அந்த சம்பவத்தில் மொத்தம் 166 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் நடந்திருக்கும் குண்டுவெடிப்பை தேசிய எமர்ஜென்சியாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். தற்கொலைப் படையை சேர்ந்தவர்கள் 3 சர்ச்சுகள், 3 ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 300 பேர் உயிரிழந்தார்கள். இவர்களில் 35-க்கும் அதிகமான வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவர். 

இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் இந்த தாக்குதலுக்கு கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற காட்டு மிராண்டித்தனமான செயல்களுக்கு இடம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். 

.