This Article is From Dec 30, 2019

ஜார்க்கண்டின் 11-வது முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்! விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு!!

Hemant Soren Oath Ceremony: 2000-ம் ஆண்டின்போது ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் 3 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது.

Hemant Soren oath : ஜார்க்கண்டின் 5வது முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்கிறார். இதற்கு முன்பாக ரகுபர் தாஸ் பொறுப்பில் இருந்தார்.

ஹைலைட்ஸ்

  • 2-வது முறையாக முதல்வர் பொறுப்பேற்கிறார் ஹேமந்த் சோரன்
  • தேர்தலில் ஜே.எம்.எம். - காங்கிரஸ் - ஆர்.ஜே.டி கட்சிகள் கூட்டணி வைத்தன.
  • சோரன் கூட்டணி 81-ல் 47 தொகுதிகளில் வென்றதால் ஆட்சியை பிடித்தது
Ranchi, Jharkhand:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும செய்து வைத்தார்.

ஜார்க்கண்டின் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பது என்பது இது இரண்டாவது முறையாகும். இந்த விழாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ராஞ்சியில் உள்ள மொராபதி மைதானத்தில் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பதவிப் பிரமாண நிகழ்ச்சில் கலந்து கொண்டுள்ளனர்.

இந் நிகழ்ச்சி உறுதியேற்பு நாள் என பொருள்படும் ‘சங்கல்ப திவாஸ்' எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக இன்று ட்வீட் செய்திருந்த ஹேமந்த் சோரன், அனைத்து மக்களும் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை பாருங்கள்' என்று கூறியிருந்தார்.

இன்னொரு ட்வீட்டில் வீடியோவை பகிர்ந்த சோரன், ‘எங்களது கூட்டணியை வெற்றி பெற வைத்தமைக்காக நான் மிகவும் மக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன். உங்கள் எதிர்பார்ப்புகளை புரிந்து வைத்துள்ளேன். அனைவரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

கடந்த திங்களன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் 5-வது நபர் ஹேமந்த் சோரன் ஆவார். பாஜகவின் ரகுபர் தாசுக்கு பின்னர் அவர் முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். மாநிலத்தில் 5 ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்த முதல்வர் என்ற பெயர் ரகுபர் தாசுக்கு உண்டு. இந்த தேர்தலில் பாஜகவுக்கு 25 தொகுதிகள் கிடைத்தன.

ஆக்ஸ்போர்டு, டாடா சமூக அறிவியல் நிறுவனம் உள்ளிட்ட பல்கலைக் கழகத்தை சேர்ந்த குழுவினர், ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். அவர்கள் வகுத்த யுக்திகள் சோரனுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக போராடியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான சிபு சோரனின் மகன்தான் இந்த ஹேமந்த் சோரன். அவர் கடந்த 2009-ல் இருந்து 2009 வரையில் அர்ஜுன் முண்டா முதல்வராக இருந்தபோது துணைமுதல்வர் பொறுப்பில் இருந்தார். அந்த நேரத்தில் ஹேமந்தின் கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளித்திருந்தது.

2013 ஜனவரியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பாஜகவுக்கு அளித்த ஆதரவை விலக்கியது. இதன்பின்னர் குடியரசு தலைவர் ஆட்சி மாநிலத்தில் கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு ஜூலையில் ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சியைப் பிடித்து மிகவும் இளம் வயதில் (38) முதல்வரானவர் என்ற பெயரை பெற்றார்.

அவரது 17 மாத கால ஆட்சியில் ஹேமந்த் சோரன் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெண்களுக்கு அரசுப் பணிகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு.,மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள சராண்டா, மேற்கு சிங்பூம் பகுதியில் வளர்ச்சியை ஏற்படுத்தியும், பாதுகாப்புகளை அதிகப்படுத்தியும் பிரச்னையை சிறப்பாக எதிர்கொண்டது உள்ளிட்டவை அடங்கும்.

.