This Article is From Nov 21, 2018

‘கனமழை முதல் மிக கனமழை!’- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இடையில் நாளை கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்ற வீசும்

‘கனமழை முதல் மிக கனமழை!’- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து பிரபல வானிலை கணிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்கிற பிரதீப் ஜான், ‘கஜா புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளிலிருந்து மேகக் கூட்டங்கள் விலகி, வட தமிழகத்தில் மையம் கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த முறை கண்டிப்பாக புயல் காற்று வீசாது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். குறிப்பாக, டெல்டா பகுதிகளில் மீண்டுமொரு புயல் காற்று வீசப் போகிறது என்பதில் எந்த வித உண்மையும் இல்லை.

அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றுத் திருவள்ளூரில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.

டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரிதாக மழை இருக்காது. அதே நேரத்தில் 23 ஆம் தேதி, மழை பெய்யலாம்.

குறைந்த காற்றழுத்த மண்டலம், கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இடையில் நாளை கரையைக் கடக்கும் போது, அதிகபட்சமாக 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்ற வீசும்.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் மிக முக்கியமானது. அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் சரியாக மழை பெய்யவில்லை என்றால், வட கிழக்குப் பருவமழை நகரத்துக்குத் தோல்வியில்தான் முடியும்' என்று பதிவிட்டுள்ளார்.

.