This Article is From Apr 11, 2020

எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் - பீரங்கியால் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்! வீடியோ வெளியீடு

இந்திய ராணுவம் போபர்ஸ் ரக பீரங்கிகள் மூலம் பதிலடியை கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிமருந்து கிடங்குகள், தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை தகர்க்கப்பட்டுள்ளன. 

பாகிஸ்தானின் அத்து மீறலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

New Delhi:

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

ட்ரோன் மூலமாக இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனை பத்திரிகையாளர்களிடம் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. 

இந்திய ராணுவம் போபர்ஸ் ரக பீரங்கிகள் மூலம் பதிலடியை கொடுத்துள்ளது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிமருந்து கிடங்குகள், தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை தகர்க்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் பதிலடிக்கு சற்று முன்பாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. 

கடந்த ஞாயிறன்று இந்திய ராணுவத்தின் சிறப்பு படை 5 பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது. துரதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். 

காஷ்மீரின் குப்வாரா பகுதி வழியே செல்லும் தேசிய எல்லைக்கோட்டின் தற்போது அதிக பனி காணப்படுகிறது. இதைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் நவீன ஆயுதங்களுடன் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றனர். 

இந்த நிலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் கடந்த 1-ம்தேதி 5 பேக்குகளை கண்டெடுத்தனர். இதையடுத்து, தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ராணுவத்தின் மற்ற முகாம்கள் உஷார்படுத்தப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. 

ஏப்ரல் 3-ம் தேதி, தீவிரவாதிகளின் காலடித் தடம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைவைத்து தேடுதல் பணிகள் நடந்தன. 

பனி அதிகம் காணப்பட்டதால் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில் வீரர்கள் ஞாயிறன்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, பனிப்பாறையின் விளிம்பில் நின்று கண்காணித்தனர். அந்த நேரத்தில் திடீரென பனிப்பாறை விளிம்பு உடைந்தது. இதனால் வீரர்கள் அனைவரும் ஒரு நீரோடைக்கு அருகே விழுந்தனர்.

அதிர்ஷ்டவசமாக அங்குதான், தீவிரவாதிகள் அங்கு அமர்ந்திருந்தார்கள். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மிக நெருங்கிய நிலையில், நேருக்கு நேராக இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். 

இதில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். துரதிருஷ்டவசமாக இந்த என்கவுன்ட்டரில் சிப்பாய்கள் பால கிருஷ்ணன், அமித் குமார், சத்ரபால் சிங், ஹவில்தார் தேவேந்திர சிங், சஞ்சீவ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

.