ஊரடங்கு: சொந்த ஊர் செல்ல உணவின்றி 135 கி.மீ தூரம் நடந்து சென்ற சோகம்!

கடந்த செவ்வாய்க்கிழமையன்று நரேந்திர செல்கே சந்திராபூரில் உள்ள தனது சொந்த ஊர் செல்ல நாக்பூர் - நாக்பித் சாலையில் தனது நடைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

ஊரடங்கு: சொந்த ஊர் செல்ல உணவின்றி 135 கி.மீ தூரம் நடந்து சென்ற சோகம்!

நரேந்திர செல்கே தனது சொந்த ஊர் செல்ல 135 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். (Representational image)

ஹைலைட்ஸ்

  • சொந்த ஊர் செல்ல உணவின்றி 135 கி.மீ தூரம் நடந்து சென்ற சோகம்!
  • நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது.
  • ஊரடங்கு உத்தரவு பீதியால் மக்கள் சொந்த ஊர் திரும்பினர்
Nagpur:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் 26வயது கூலித் தொழிலாளி ஒருவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக உணவின்றி 135 கி.மீ தூரம் நடந்து சென்றுள்ளார். 

ஊரடங்கு உத்தரவு பீதியால் ஏழை மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அந்த வகையில், புனேவில் கூலித் தொழிலாளியாக பணிபுரியும் நரேந்திர செல்கேவும் தனது சொந்த ஊரான சந்திராபூர் செல்ல திட்டமிட்டுள்ளார். 

இதற்காக புனேவில் இருந்து நாக்பூர் செல்லும் கடைசி ரயிலை பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அரசு பல்வேறு தடை உத்தரவுகளை பிறப்பித்ததைத் தொடர்ந்து, அவர் நாக்பூரிலே சிக்கித் தவித்துள்ளார். 

சொந்த ஊர் செல்ல வேறு எந்த வழிகளும் இல்லாத நிலையில், செல்கே நடந்தே செல்ல திட்டமிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமையன்று நரேந்திர செல்கே சந்திராபூரில் உள்ள தனது சொந்த ஊர் செல்ல நாக்பூர் - நாக்பித் சாலையில் தனது நடைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். 

இரண்டு நாட்களாக எந்த உணவுகளும் இல்லாமல் நடந்து சென்ற அவர், தண்ணீரை மட்டும் அருந்தி சென்றுள்ளார். 

இதையடுத்து, புதன்கிழமை இரவு சிவாஜி சதுக்கம் அருகே போலீசார் ரோந்து வாகனம் செல்கேவை தடுத்து நிறுத்தியுள்ளது. தொடர்ந்து, ஊரடங்கை மீறியது குறித்து அவரிடம் போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது, அவர் தான் 2 நாட்களாக நடந்து வரும் விவரத்தைத் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து துணை காவல் ஆய்வாளர் நிஷிகாந்த் கூறும்போது, உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது வீட்டிலிருந்து அவருக்கு உணவு எடுத்துச்சென்று வழங்கியுள்ளார். 

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவரை காவல்துறை வாகனம் ஏற்பாடு செய்து அங்கிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள அவரது ஊருக்கு அழைத்துச்சென்று விட்டுள்ளனர். 

எனினும், 14 நாட்களுக்கு செல்கே வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Listen to the latest songs, only on JioSaavn.com