
Maharashtra: ' பதவி ஆசை எடுத்துத் திரிந்த பாஜக, மிகப் பெரும் விலையைக் கொடுத்துள்ளது'
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி, மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு ஏற்பட்ட நிலையை கேலி செய்து கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் கர்நாடகாவின் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கும் அதே நிலைதான் வரும் என்றும் ஆருடம் கூறியுள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ‘உடனடியாக பாஜக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்,' என்று அதிரடி உத்தரவிட்டது.
Popular adage 'reap what you sow' aptly applies to Fadnavis. He has harvested the bounty he has sown. (BSY will soon land himself in a similar situation). BJP which is after lust for power, has paid a heavy price.
— H D Kumaraswamy (@hd_kumaraswamy) November 26, 2019
இதைத் தொடர்ந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது பதவியை ராஜினாமா செய்தார். அஜித் பவாரும் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிட்டார்.
இது குறித்து கருத்து கூறியுள்ள குமாரசாமி, “விதை விதைத்தவன் வினை அறுப்பான் என்கிற பழமொழி, ஃபட்னாவிஸுக்குப் பொருந்தும். அவர் விரித்த வளையில் அவரே விழுந்துவிட்டார். அதைப்போலவே, பி.எஸ்.எடியூரப்பாவும் மாட்டுவார். பதவி ஆசை எடுத்துத் திரிந்த பாஜக, மிகப் பெரும் விலையைக் கொடுத்துள்ளது,” என்றுள்ளார்.
கர்நாடகாவில் ஆட்சி புரிந்து வந்த காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் (Congress - JDS) கூட்டணி அரசு கவிழ காரணமாக இருந்தது, அக்கட்சிகளில் இருந்து, அதிருப்தி தெரிவித்து வெளியேறிய 17 எம்எல்ஏ-க்கள். அவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய சட்டசபை சபாநாயகர், 17 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதற்கு எதிராக எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
17 அதிருப்தி எம்எல்ஏ-க்களால் கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு. இதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏ-க்கள் மற்றும் மஜத-வைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சட்டமன்ற சபாநாயகர். தொடர்ந்து, பாஜக, ஆட்சியைப் பிடித்தது.