This Article is From Aug 03, 2018

‘ஒரு குடிமகனாகவே மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல வேண்டும்!’- நித்யானந்தாவுக்கு உத்தரவு

மதுரை ஆதீன மடத்தில் தனது அனுமதி குறித்து நித்யானந்தா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்

‘ஒரு குடிமகனாகவே மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல வேண்டும்!’- நித்யானந்தாவுக்கு உத்தரவு

மதுரை ஆதீன மடத்தில் தனது அனுமதி குறித்து நித்யானந்தா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் நீதிமன்றம், ‘ஒரு சாதரண குடிமகனாக நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் செல்லலாம். மடத்தின் ஆதீனமாக செல்ல முடியாது’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நித்யானந்தா, ‘மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனம் நான் தான். எனவே, நான் முறைப்படி மடத்திற்குள் சென்று எனது பணிகளை செய்ய வேண்டும். அதற்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு எனக்கு கொடுக்கப்பட வேண்டும்’ என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி வி.முரளிதரனுக்குக் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், ‘நித்யானந்தா தான், குரு மகா சன்னிதானத்தின் 293 வது ஆதீனமா என்பது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், 293 வது ஆதீனமாக நித்யானந்தா மதுரை மடத்திற்குள் நுழைய முடியாது. அதே நேரத்தில் ஒரு சாதாரண குடிமகனாக அவர் மடத்திற்குள் செல்லலாம். அதற்கு போலீஸ் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். ஆனால், தனது வருகை குறித்து நித்யானந்தா முன் கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். மேலும், அவர் எந்த வித சட்ட ஒழுங்கு சீர்குலைக்கும் பிரச்னையிலும் ஈடுபடக் கூடாது’ என்று உத்தரவிட்டார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையக் கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி, ’மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனமாக நித்யானந்தா அறிவிக்கப்படாத நிலையில், அவர், ‘நான் தான் 293 வது ஆதீனம்’ என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மீறினால் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்’ என்று உத்தரவிட்டது நீதிமன்றம். இதையடுத்து, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார் நித்யானந்தா.

அவர், கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரை ஆதீன மடத்தின், 293 வது ஆதீனமாக அறிவிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களிலேயே அந்த அறிவிப்பு முடிவு திரும்ப பெறப்பட்டது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.