This Article is From Sep 22, 2018

பொது இடங்களில் கட்சிக் கொடி நடுவதற்கு தடை கோரி வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கடந்த 2016 தேர்தலின் போது, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்

பொது இடங்களில் கட்சிக் கொடி நடுவதற்கு தடை கோரி வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை உயர் நீதிமன்றம்

பொது இடங்களில் கட்சிக் கொடிகளை நடுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகம் முழுவதும் சாலையோரம், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் குழிதோண்டி அரசியல் கட்சிகள் தங்களது கொடியை நிரந்தரமாக நட்டு வருகிறார்கள். இந்த கொடிகளுக்கு மேடை அமைப்பதற்காக குழிதோண்டும்போது தொலைபேசி கேபிள், மின் இணைப்பு கேபிள் போன்றவை பாதிக்கப்படுகிறது. இதனால், தொலைபேசி, மின்சார சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. 

கடந்த 2016 தேர்தலின் போது, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் அரசியல் கட்சிக் கொடிகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டன. எனவே, பொது மக்களுக்கு தொந்தரவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் கொடிகளை நிரந்தரமாக நடுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், முரளிதரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.