This Article is From Sep 19, 2018

“கோயிலில் யானை வளர்க்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

பாகனை மிதித்துக் கொன்ற சமயபுரத்து மாரியம்மன் கோயில் யானையை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி வழக்கு

“கோயிலில் யானை வளர்க்க சட்டத்தில் இடம் இருக்கிறதா?” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கோயிலில் யானை வளர்ப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. இதுதொடர்பாக அடுத்த மாதம் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சி அருகேயுள்ள சமயபுரத்து மாரியம்மன் கோயிலுக்கு முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மாசினி என்ற யானையை பரிசாக அளித்தார். அந்த யானை தன்னை வளர்த்த பாகனை சமீபத்தில் மிதித்துக் கொன்றது. இதையடுத்து யானையை கால்நடை மருத்துவமனை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு நிரந்தரமாக மாற்ற வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ் குமார் ஆகியோர் கோயிலில் யானை வளர்ப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். மேலும் இதுதொடர்பாக அடுத்தமாதம் 10-ம்தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் மனுதாரரான வழக்கறிஞர் அந்தோனி ரூபின் தனது மனுவில், மாசினி தனது பாகனை மிதித்துக் கொன்றிருப்பதன் மூலம் உணர்வு ரீதியாக யானை பாதிப்பு அடைந்துள்ளது நிரூபணமாகி இருக்கிறது. மேலும் அதனை கோயிலில் வைத்து பராமரித்தால் அதன் பாகனுக்கும், அதனை காண வருபவர்களுக்கும் யானை பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. எனவே அதனை புத்துணர்வு முகாமுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.