இடுப்பளவு வெள்ளம்: 1.5 கி.மீக்கு 2 குழந்தைகளை தோள்களில் தூக்கி சென்ற காவலர்!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குஜராத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

காவலர் பிரித்விராஜ் வெள்ளத்தில் சிக்கிய 2 குழந்தைகளை 1.5 கி.மீக்கு தோள்களில் தூக்கி சென்றார்.

New Delhi:

குஜராத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய இரு பெண் குழந்தைகளை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தோள்களில் தூக்கிக் சென்று மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவமழையால் வடமாநிலங்கள், தென்மாநிலங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதில், குஜராத்தில் பெய்து வரும் கனமழையால், பல கிராமங்கள் நீரில் முழ்கியுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசித்துவந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி காவல்துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் பலத்த சேதமடைந்த மோர்பி கிராமத்தில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி மீட்பு பணி நடைபெறும் போது காவலர் ஒருவர் செய்த செயலுக்கு பெரிதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
 


குஜராத்தை சேர்ந்த காவலர் பிரித்விராஜ் சிங் ஜடேஜா, இவர் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்படி, மீட்பு பணியில் ஈடுபடும்போது, அந்த பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் இரண்டு குழந்தைகள் வெளிவர முடியாமல் தவித்து வந்துள்ளனர். 

இவர்களை கண்ட காவலர் பிரித்விராஜ் தனது இருதோள்களிலும் குழந்தைகளை அமரவைத்து சுமார் 1.5 கி.மீட்டர் தூரம், இடுப்பளவு வெள்ளத்தில் சுமந்து சென்று முகாம்களில் பத்திரமாக சேர்த்துள்ளார். இது தொடர்பான வீடியோவும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து, காவலர் ஜடேஜாவின் இந்த துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முதலில் அந்த காவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், கடின உழைப்பு, அரசு அதிகாரியின் அர்ப்பணிப்பு, பாதகமான சூழ்நிலையில் கடமைகளை நிறைவேற்றுவதற்கான பல எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும் என்று பாராட்டியுள்ளார்.

இதேபோல், இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் உள்ளிட்டோரும் இந்த காவலரை புகழ்ந்துள்ளனர். அவரது முன்மாதிரியான அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு தலைவணங்குகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.