குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மறைவு: மு.க.ஸ்டாலினின் உருக்கமான இரங்கல்!

"காத்தவராயனுக்கு “கழகப் பணியும்” “மக்கள் பணியும்” இரு கண்கள் போன்றது என்பதை நானறிவேன்"

குடியாத்தம் திமுக எம்எல்ஏ காத்தவராயன் மறைவு: மு.க.ஸ்டாலினின் உருக்கமான இரங்கல்!

"என்றைக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது நீங்காப்பற்று வைத்திருந்த அவர் - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அசைக்க முடியாத தூணாக குடியாத்தம் பகுதியில் விளங்கியவர்"

ஹைலைட்ஸ்

  • குடியாத்தம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டவர் காத்தவராயன்
  • இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றார்
  • சில காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் காத்தவராயன்

குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட காத்தவராயன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். 

காத்தவராயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளராகவும் இருந்துள்ளார். சிறிது காலமாக இருதய நோயால் அவதிப்பட்டு வந்த காத்தவராயன் ஒரு மாதத்திற்கு முன்புதான் அப்போலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமானதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.

அவரின் மறைவைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினருமான திரு எஸ்.காத்தவராயன் திடீரென்று மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு சொல்லொனாத் துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக, மாவட்டப் பிரதிநிதியாகப் பணியாற்றிய அவர் - தற்போது மாவட்ட துணை செயலாளர். கடைக்கோடி தொண்டனிடமும் கனிவுடன் பழகும் மனிதநேயமிக்க பண்பாளர். பேரணாம்பட்டு நகரத் தலைவராக பணியாற்றி - மக்கள் மனம் கோணாமல் பல்வேறு சமுதாயப் பணிகளையாற்றி கழகத்திற்கு அந்தப் பகுதியில் நற்பெயர் சம்பாதித்துக் கொடுத்தவர்.

குடியாத்தம் இடைத்தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று - கழக சட்டமன்ற உறுப்பினராக அமோக வெற்றி பெற்ற அவர் தொகுதி பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாகத் தொகுத்து வாதாடி அவையிலிருந்தவர்களை எல்லாம் வியக்க வைத்தவர். அவரது வாதத்திறமையை நேரில் கண்ட நான் - அவரை என்னருகில் அழைத்துப் பாராட்டியது இன்றும் என் கண் முன் வந்து நிழலாடுகிறது.

திரு.காத்தவராயனுக்கு “கழகப் பணியும்” “மக்கள் பணியும்” இரு கண்கள் போன்றது என்பதை நானறிவேன். என்றைக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது நீங்காப்பற்று வைத்திருந்த அவர் - திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அசைக்க முடியாத தூணாக குடியாத்தம் பகுதியில் விளங்கியவர். என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்டமன்ற உறுப்பினர்களில் நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்குப் பேரிழப்பு. இந்த துயரமிகுந்த தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என இரங்கல் கூறியுள்ளார். 

Listen to the latest songs, only on JioSaavn.com