8 வழிச்சாலை: நிதின் கட்கரி கருத்தில் பாமகவுக்கு உடன்பாடில்லை: அன்புமணி

8 வழிச்சாலை விவகாரத்தில் மக்கள் நலனுக்கு எதிரான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பை. ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பாமகவுக்கு உடன்பாடில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

8 வழிச்சாலை: நிதின் கட்கரி கருத்தில் பாமகவுக்கு உடன்பாடில்லை: அன்புமணி

8 வழிச்சாலை விவகாரத்தில் மக்கள் நலனுக்கு எதிரான மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் அறிவிப்பை. ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பாமகவுக்கு உடன்பாடில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, 

"சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களிடம் ஆலோசனை நடத்தி, அவர்களின் ஒப்புதலைப் பெற்று சென்னை - சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியிருக்கிறார். மக்கள் நலனுக்கு எதிரான இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் பாமகவுக்கு உடன்பாடில்லை. 

சென்னைக்கும் சேலத்திற்கும் இடையே ஏற்கெனவே 3 நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில், புதிதாக 8 வழிச்சாலை தேவையில்லை என்பது தான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். இந்த திட்டத்திற்காக 7,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; 10,000 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்பதால் தான் அத்திட்டத்தை பாமக தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது.

இந்த காரணத்திற்காகத் தான் பாதிக்கப்படவுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு அதனடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். அந்த வழக்கில் தான் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். போராடிப் பெற்ற இந்தத் தீர்ப்பின் மூலம் 5 மாவட்ட விவசாயிகளையும் பாமக பாதுகாக்கும்; ஒருபோதும் 8 வழிச்சாலை அமைக்கப்படாது.

சேலம் கூட்டத்தில் பேசிய நிதின்கட்கரி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற அடிப்படையில் தான் 8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழக மக்களிடையே அத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது.

அதுமட்டுமின்றி, 8 வழிச்சாலைத் திட்டம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும்; அது அரசின் கடமை என்று முதல்வர் கூறியுள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது சாத்தியமல்ல.

மேலும், 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம். வாணியம்பாடியிலிருந்து சேலம் செல்லும் 179-ஏ எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் ரூ.515 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் 8 வழிச்சாலைக்கு தேவை இருக்காது என்பதால் இத்திட்டம் தேவையில்லை என்பதை நிதின் கட்கரியிடம் எடுத்துக் கூறி திட்டத்தை கைவிட வைப்போம் என்று அவர் கூறினார்.

More News