பிரதமர் மோடியின் விளக்கேற்றும் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ஹைலைட்ஸ்
- நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும்படி பிரதமர் கோரிக்கை
- ஒரே நேரத்தில் மின் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டால் சிக்கல் நேரிட வாய்ப்பு
- விளக்கு ஏற்றுவது தொடர்பாக புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
New Delhi: நாளை இரவு 9 மணிக்கு விளக்கேற்றும்போது கணினி, மின் விசிறி, ஏசி உள்ளிட்டவைகளை அணைக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்படுகிறோம் என்பதை வெளிப்படுத்த நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மக்கள் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா விவகாரம் தொடர்பாக இருமுறை நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த நிலையில், நேற்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அதில் அவர், ''ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டில் மின் விளக்குகளை அனைத்து டார்ச், விளக்குகள் அல்லது மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். மொபைல் ஃப்ளாஷ்களையும் மக்கள் பயன்படுத்தலாம். இதன் மூலம், நம்மில் யாரும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவோம். 130 கோடி இந்தியர்களின் பலத்தை உயர்த்துவோம்'' என்று தெரிவித்தார்.
மோடியின் இந்த வேண்டுகோளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட தமிழக மின்சார வாரியம், “நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள். அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்சினை ஏற்படும். எனவே மின் சாதனங்களை அணைக்க வேண்டாம்,” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு தொடர் சர்ச்சைகளை பிரதமர் மோடியின் விளக்கு ஏற்றும் கோரிக்கை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய மின்சாரத்துறை மோடியின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-
ஒரே நேரத்தில் அனைத்து மின்சாதனங்களை அணைத்து விட்டு, ஒரே நேரத்தில் அதைப் பயன்படுத்தும்போது மின்சார பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. இதை ஏற்கத் தேவையில்லை.
ஏனென்றால் இந்திய மின் தொகுப்பு (Electricity Grid) மிக வலுவாக, நிலைத்தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவுக்கு மின்துறை திறமையாக இருக்கிறது.
நாளை இரவு விளக்கு ஏற்றும்போது மின் விளக்குகளை மட்டும் அணைத்தால் போதும். கணினிகள், மின் விசிறிகள், ஏ.சி., தெரு விளக்குகள், டிவி உள்ளிட்டவற்றை அணைக்கத் தேவையில்லை.
மக்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள் உள்ளிட்டவற்றில் விளக்குகள் அணைக்கத் தேவையில்லை. மக்கள் நலனுக்காக தெருவிளக்குகள் எரிவதை உள்ளாட்சி பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.