This Article is From Jul 13, 2020

இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!

"சுந்தர் பிச்சை உடனான உரையாடலின்போது கோவிட்-19 தொற்று காலத்தில் எழுந்துள்ள பணிச் சூழல் பற்றி விவாதித்தோம்."

இந்திய ‘டிஜிட்டல் பொருளாதாரத்தை’ ஊக்குவிக்க கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு!

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த 75,000 கோடி ரூபாய் முதலீடானது இந்தியாவில் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது கூகுள்.

ஹைலைட்ஸ்

  • கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இன்று மோடியுடன் உரையாற்றியுள்ளார்
  • வீடியோ மூலம் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்
  • இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளனர்
New Delhi:

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கூகுள் நிறுவனம் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த தகவலை கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

அவர், “இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்க்க 10 பில்லியன் டாலர் முதலீட்டை நாங்கள செய்ய உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடியின் கனவான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

மேலும் அவர், “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மீது எங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையே எங்களது நடவடிக்கை பிரதிபலிக்கிறது” என்றுள்ளார். 

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த 75,000 கோடி ரூபாய் முதலீடானது இந்தியாவில் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ள கூகுள், ஈக்வட்டி முதலீடுகள் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் அது செயல்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது. 

இந்தத் திட்டம் குறித்து கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவை டிஜிட்டல் வசமாக மாற்ற இந்தத் திட்டமானது 4 வகையில் கவனம் செலுத்தும். முதலாவது, ஒவ்வொரு இந்தியனுக்கும் அவனது தாய் மொழியிலேயே, மிகவும் மலிவான விலையில் தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது, இந்தியாவின் தனிப்பட தேவைக்கு ஏற்றது போல செயல்பாடுகளில் ஈடுபடுவது. மூன்றாவது, டிஜிட்டல் பரிமாற்றத்துக்குத் தயாராகும் வியாபரங்களுக்கு துணைபுரிவது. நான்காவது, சமூக நன்மைக்காக தொழில்நுட்பம் மற்றும் ஏஐ உள்ளிட்டவற்றை பயன்படுத்துவது. குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது” என விளக்கியுள்ளது. 

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பெரும் தாக்கம் குறித்துப் பேசியுள்ள கூகுள், “நம் சுகாதாரம் குறித்தும் பொருளாதாரம் குறித்தும் எழுந்துள்ள சவால்கள், இனி நாம் எப்படி வேலை பார்ப்பது மற்றும் எப்படி வாழ்வது என்பது குறித்து சிந்திக்க வைத்துள்ளது. எனவே எங்கள் இலக்கானது, அடுத்து வரும் கண்டுபிடிப்பு அலையில் இந்தியா பயனடைவதை மட்டும் உறுதி செய்யாமல், அதை முன்னின்று வழிநடத்துவதிலும் துணை புரிவோம்,” எனக் கூறியுள்ளது. 

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, சுந்தர் பிச்சையுடன் வீடியோ மூலம் கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர், “இன்று காலை, சுந்தர் பிச்சையுடன் மிக நல்ல முறையில் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டேன். நாங்கள் பலதரப்பட்ட விஷயங்கள் குறித்துப் பேசினோம். குறிப்பாக இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் வாழ்க்கையை தொழில்நுட்பம் மூலம் எப்படி மாற்றுவது என்பது குறித்து உரையாடினோம்.
 

சுந்தர் பிச்சை உடனான உரையாடலின்போது கோவிட்-19 தொற்று காலத்தில் எழுந்துள்ள பணிச் சூழல் பற்றி விவாதித்தோம். இந்த தொற்று நோயானது விளையாட்டுத் துறைக்கு கொண்டு வந்துள்ள தாக்கம் குறித்தும், டேட்டா பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்தும் பேசினோம்.

கூகுள் நிறுவனம், கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படி செயலாற்றுகிறது என்பதை தெரிந்து கொண்டேன்,” என்று பதிவிட்டுள்ளார். 


 

.