This Article is From Jun 14, 2018

கேரளாவில் கனமழை: நிலச்சரிவால் சிறுமி உள்பட 4 பேர் பலி!

தென்மேற்கு பருவமழையால் கேரள மாநில முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது

ஹைலைட்ஸ்

  • இதுவரை கன மழையால் 27 பேர் இறந்துள்ளனர்
  • 45 முகாம்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன
  • தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Thiruvananthapuram: தென்மேற்கு பருவமழையால் கேரள மாநில முழுவதும் கனத்த மழை பெய்து வருகிறது. கன மழையால் இதுவரையில் 27 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக இன்று மட்டும் ஒரு ஒன்பது வயது சிறுமி உள்பட நான்கு பேர் பலியாகி உள்ளனர். இன்றைய அதீத மழையால் தாமரசேரி பகுதியில் உள்ள கத்திபாரா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மல்லபுரம், வயநாடு பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனத்த மழையினால் பயிர்கள் நாசமாகி உள்ளன.

கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் மழையினால் மட்டும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக பேரிடர் கால மேலாண்மை வாரியத்தினர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட சாலைகளை செப்பணிடும் வேளையில் போக்குவரத்துத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மலை சாலைகளில் மக்கள் யாரும் பயணிக்க வேண்டும் என்றும் குறிப்பாக இடுக்கி மலைச் சரிவுகளில் பயணம் வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மழையால் முக்கிய நதிகளில் ஒன்றான பாரதபுழா, பவானி, சிறுவானி உள்ளிட்ட நதிநீர் நிலைகளும் வெள்ளப் பெருக்கால் நிரம்பி வழிகிறது. இதுவரையில் மக்களின் பாதுகாப்புக்காக 45 மீட்புப் பணி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளும் வெள்ளக்காடாக உள்ளன.

மேலும், அடுத்த ஐந்து நாள்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் பெரும் அலைகள் எழும் என்றும் இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
.