This Article is From Jun 10, 2019

திரைத்துறையில் முத்திரை பதித்த கிரிஷ் கர்னாட்! மகத்தான வாழ்வு வாழ்ந்த மனிதர்!!

நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கிரிஷ் கர்னாட் இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81.

திரைத்துறையில் முத்திரை பதித்த கிரிஷ் கர்னாட்! மகத்தான வாழ்வு வாழ்ந்த மனிதர்!!

திரைத்துறை ஜாம்பவான் கிரிஷ் கர்னாட்.

ஹைலைட்ஸ்

  • 45 ஆண்டுகளாக நடிகனாக இருந்தவர் கிரிஷ் கர்னாட்
  • தேசிய விருதுகள் பலவற்றை வென்றுள்ளார்
  • நடிகர், இயக்குனர், எழுத்தாளர், கல்வியார் என பல முகங்கள் உண்டு
New Delhi:

திரைத்துறையில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பலதுறைகளில் முத்திரை பதித்த கிரிஷ் கர்னாட் இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81.

வயது முதிர்வு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிர மாநிலம் மாதேரான் கிராமத்தில் பிறந்த கிரிஷ், கர்நாடகாவின் சிர்சி தர்வாட் ஆகிய இடங்களில் வளர்ந்தவர். அங்குதான் அவருக்கு நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 

கிராமத்து நாடகங்களில் நடித்த கிரிஷ், பின்னர் கர்நாடக கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து தத்துவம், அரசியல் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 

முதலில் அவரது பணி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில்தான் இருந்தது. பின்னர், முழு நேர எழுத்தாளராக மாறினார். அவரது முதல் புத்தகம் யயாதி 1961-ல் வெளியானது. 1964-ல் துக்ளக்கையும், 1971-ல் ஹயாவதானவையும் எழுதினார். 

கன்னனடத்தில் பிரபலான நூல்களை ஆங்கிலத்திற்கும், பிற மொழிகளுக்கும் கர்னாட் மொழி மாற்றம் செய்திருக்கிறார். அவை பின்னாளில் புகழ்பெற்ற இயக்குனர்களால் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 

நடிகர் என்ற முறையில் கிரிஷுக்கு நீண்ட நெடிய அனுபவம் உண்டு. 1970-ல் கன்னட மொழிப்படமான சம்ஸ்காராவில் கிரிஷ் நடித்தார். அவருக்கு இந்தியிலும் அதன்பின்னர் மிகப்பெரிய வாய்ப்புகள் குவிந்தன. நிஷாந்த், மந்தன், டோர், சுவாமி உள்ளிட்டவை அவர் நடித்த மிகவும் பிரபலமான இந்தி படங்கள். இயக்குனர் என்ற முறையில் 1971ல் வம்ஷ விருக்ஷா, 1984-ல் உத்சவ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

சின்னத்திரை ரசிகர்கள் கிரிஷ் கர்னாடை மால்குடி டேஸில் இருந்து அறிவார்கள். இந்திரா தனுஷ் என்பதும் அவரது பிரபல சின்னத்திரை தொடராகும். சமீபத்தில் பிரபலம் அடைந்த சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹே (2017)-ல் அவர் நடித்திருந்தார். 

அரசியல், சமூக பணிகளிலும் கிரிஷ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அடிப்படைவாதத்தை எதிர்த்த கிரிஷ் கர்னாட் அவற்றை தனது திரைப்படங்களிலும் பயன்படுத்தியுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் தலைவர், லண்டன் நேரு சென்டரின் இயக்குனர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்திருக்கிறார். 

பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சங்கீத நாடக அகாடமி விருது, ஞான பீட விருது உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.  வம்ஷ விருக்ஷாவை இயக்கியதற்காகவும், பூமிகா படத்திற்கு திரைக்கதை அமைத்ததற்காகவும் கிரிஷ் கர்னாடுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன. 

.