This Article is From Sep 05, 2018

‘பிடித்திருந்தால் சொல்லுங்கள், பெண்ணை கடத்திவிடலாம்!’- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

தனது தொகுதியான காத்கோபரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, பொது மேடையில் உரையாற்றினார்

‘பிடித்திருந்தால் சொல்லுங்கள், பெண்ணை கடத்திவிடலாம்!’- பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராம் கதாம் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பொது மேடையில் பேசும் போது, ‘யாருக்காவது ஒரு பெண்ணைப் பிடித்திருந்தால் சொல்லுங்கள், அந்தப் பெண்ணை நான் கடத்தி வந்து உங்களிடம் ஒப்படைக்கிறேன்’ என்று பேசியுள்ளார். அவர் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இப்படி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறி இருப்பது மகாராஷ்டிரவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது தொகுதியான காத்கோபரில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, பொது மேடையில் உரையாற்றினார் எம்.எல்.ஏ ராம் காதம். அப்போது அவர், ‘உங்களுக்கு எதாவது வேண்டுமா? என்னிடம் வாருங்கள். நீங்கள் ஒரு பெண்ணிடம் உங்கள் விருப்பத்தை சொன்ன பிறகு, அவள் மறுக்கிறாளா? என்னிடம் வாருங்கள். நான் உதவி செய்கிறேன். உங்கள் பெற்றோருடன் என்னிடம் வந்து, அந்தப் பெண்ணை உங்களுக்கு மணமுடிக்க அவர்களுக்கும் சம்மதம் என்பதை தெரியபடுத்துங்கள். அதன் பிறகு அந்தப் பெண்ணை கடத்தி வந்து உங்களிடம் ஒப்படைப்பேன்’ என்று கூறி அவரது போன் எண்ணையும் கொடுத்தார். ராம் காதமின் இந்த உரை, வீடியோவாக எடுக்கப்பட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதால், வைரலானது.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கவே ராம் காதம், ‘நான் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அப்படிப் பேசவில்லை. யாராவது என் பேச்சால் காயப்பட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளவும். முழு வீடியோவையும் பார்த்தால் என் கருத்தை புரிந்து கொள்ள முடியும். எனது அரசியல் எதிரிகள் இந்த தவறான பரப்புரைக்குப் பின்னால் இருக்கின்றனர்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா பெண்கள் கமிஷன் தலைவி விஜயா ரஹத்கர், ராம் காதமுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவரான அஷோக் சவானோ, ‘பெண்களை கடத்துவதற்காகத் தான் அவரை பாஜக, எம்.எல்.ஏ-வாக ஆக்கியுள்ளதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.