கொரோனா மருந்து விவகாரம்: “உதவி செய்யலாம். ஆனால்…”- டிரம்பை சூசகமாக சாடிய ராகுல்

மார்ச் 25 ஆம் தேதி, மத்திய அரசு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது. 

கொரோனா மருந்து விவகாரம்: “உதவி செய்யலாம். ஆனால்…”- டிரம்பை சூசகமாக சாடிய ராகுல்

டிரம்பின் இந்த அச்சுறுத்தல் வந்த சில மணி நேரங்களைத் தொடர்ந்து இந்தியா, “கோவிட்-19 மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் அனுப்பப்படும்,” என்று தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுகிறது
  • அந்த மருந்து கொரோனாவுக்கு எதிராகவும் பயன்படுகிறது
  • அந்த மருந்து உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது

காங்கிரஸின் எம்பி-யான ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா மருந்து ஏற்றுமதி குறித்து கூறிய கருத்தை சூசகமாக கண்டித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine) மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்யவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்பின் இந்தக் கருத்திற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் அவரை மறைமுகமாக சாடியுள்ளார் ராகுல்.

வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, ஏற்றுமதி செய்யாமல் இருக்குமென்றால் நான் ஆச்சரியப்படுவேன். அவர்தான் அது குறித்து என்னிடம் சொல்ல வேண்டும். நான் பிரதமர் மோடியிடம், ஞாயிற்றுக் கிழமை கூட பேசினேன். அப்போது எங்களின் மருந்துகள் வருவதை அனுமதிப்பதற்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தற்போது மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவர் சொன்னால் பரவாயில்லை. அதே நேரத்தில், அதற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியுள்ளார்.

உலகளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது. கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த விவகாரம் குறித்து ராகுல், “நட்பு என்பது பதிலடி கொடுப்பது கிடையாது. மிகவும் உதவி தேவைப்படும் எந்த தேசத்துக்கும் இந்தியா உதவி செய்ய வேண்டும். ஆனால், உயிரைக் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு அதிக அளவில் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார். 

முன்னதாக இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர்,  “உலக அரசியலில் எனக்கு பல ஆண்டுகள் அனுபவங்கள் உள்ளன. ஆனால், ஒரு அரசோ அல்லது அந்த அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரோ இப்படி இன்னொரு அரசை வெளிப்படையாக மிரட்டி நான் பார்த்தது கிடையாது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எப்போது உங்களின் மருந்தாக மாறியது அதிபரே? எப்போது இந்தியா, அதை உங்களிடம் விற்கிறதோ அப்போதுதான் அது உங்களின் மருந்தாக மாறும்,” என்று காட்டமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

டிரம்பின் இந்த அச்சுறுத்தல் வந்த சில மணி நேரங்களைத் தொடர்ந்து இந்தியா, “கோவிட்-19 மூலம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் அனுப்பப்படும்,” என்று தெரிவித்துள்ளது. மார்ச் 25 ஆம் தேதி, மத்திய அரசு, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்தது. 
 

Listen to the latest songs, only on JioSaavn.com