This Article is From Jan 25, 2019

பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிரணாப் முகர்ஜி, 2012-2017 ஆண்டுகளில் நாட்டின் குடியரசுத் தலைவராக செயல்பட்டார்.

New Delhi:

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். அதேபோல சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் புபேஷ் ஹசரிங்கா ஆகியோருக்கும் பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோவிந்த் அறிவித்துள்ளார்.

பாரத் ரத்னா அறிவிக்கப்பட்டது குறித்து பிரணாப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அடக்கத்துடனும், இந்திய மக்கள் மீது நன்றியுடனும் பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதை எற்றுக் கொள்கிறேன். நான் எப்போதும் சொல்வது போல, நான் இந்த நாட்டு மக்களுக்குக் கொடுத்ததைவிட அவர்கள் எனக்கு அதிகமாக கொடுத்துள்ளனர்' என்று நெகிழுச்சியாக பதிவிட்டிருந்தார்.

பிரணாபுக்கு விருது அளிக்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்த தேசத்துக்காக பல்லாண்டுகள் ஓய்வில்லாமல் உழைத்தவர் பிரணாப் முகர்ஜி. நாட்டின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத தாக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார். அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்' என்று ட்விட்டர் மூலம் வாழ்த்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய பிரணாப் முகர்ஜி, 2012-2017 ஆண்டுகளில் நாட்டின் குடியரசுத் தலைவராக செயல்பட்டார். 50 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் பிரணாப், நிதி அமைச்சர், ராணுவ அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.

சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக், ஜனதா கட்சியைத் தொடங்கிய தலைவர்களில் ஒருவர். பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த நானாஜி, உ.பி மற்றும் ம.பி-யில் 500 கிராமங்களில் சமூக மறுகட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தினார். 2010 ஆம் ஆண்டில், தனது 93வது வயதில் நானாஜி உயிரிழந்தார்.

முனைவர் பூபேஷ் ஹசரிங்கா, அசாமைச் சேர்ந்த இசைஞானி. சங்கீத் நாதக் அகாடமி, பத்மஸ்ரீ மற்றும் பத்ம் பூஷண் விருதுகளை பெற்றவர் ஹசரிங்கா. 2012 ஆம் ஆண்டு, அவருக்கும் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷணும் வழங்கப்பட்டது. நவம்பர் 2011-ல், தனது 85வது வயதில் காலமானார் ஹசரிங்கா

.