This Article is From Dec 01, 2018

தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரானார் அசாருதீன்..!

தெலங்கானா காங்கிரஸில், சில முக்கிய மாற்றங்களையும் காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி செய்துள்ளார்

தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரானார் அசாருதீன்..!

அசாருதீன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக பதவி வகித்தவர். (கோப்புப் படம்)

New Delhi:

இம்மாதம் 7 ஆம் தேதி தெலங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் எம்.பி.,-யுமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானா காங்கிரஸில், சில முக்கிய மாற்றங்களையும் காங்கிரஸின் தலைவர் ராகுல் காந்தி செய்துள்ளார். தேர்தலுக்கான முன்னெடுப்பாகவே இந்த மாற்றங்கள் பார்க்கப்படுகின்றன.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஷோக் கெலோட் வெளியிட்ட அறிக்கையில், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் எம்.பி-யான முகமது அசாருதீனை, தெலங்கானா காங்கிரஸின் செயல் தலைவராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கேப்டனாக இருந்த அசாருதீன் மீது, கடந்த 2000 ஆம் ஆண்டு, சூதாட்டப் புகார் சுமத்தப்பட்டது. இதையடுத்து, அசாருதீன், கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதை எதிர்த்து அசாருதீன் தொடுத்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது ஆந்திர உயர் நீதிமன்றம். தீர்ப்பில், அசாருதீனுக்கு வாழ்நாள் தடை விதித்தது தவறு என்று கூறப்பட்டது.

கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்ற பிறகு, அசாருதீன், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர், 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் போட்டியிட்டு வென்றார். 2014 ஆம் ஆண்டு, மீண்டும் எம்.பி-தேர்தலில் நின்று தோல்வியுற்றார். தற்போது, தெலங்கானாவின் செகண்டராபாத்திலிருந்து 3வது முறையாக எம்.பி., தேர்தலில் போட்டியிட உள்ளார்.

தெலங்கானாவில், ஆட்சியில் உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் இம்முறை முயற்சி மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் தேர்தலை தனித்து சந்திக்காமல், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் டி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.