This Article is From Sep 15, 2019

Boat Accident: ஆந்திராவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு: 30 பேர் மாயம்!

மொத்தம் 63 பேர் சென்ற அடந்த படகில் இருந்து தற்போது, 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Amravati:

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ளனர். 

ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையால் இயக்கப்படும் இந்த படகு, தேவிபட்னம் அருகிலுள்ள காந்தி போச்சம்மா கோயிலில் இருந்து, பிரதான சுற்றுலா தலமான அழகிய பாபிகொண்டலு மலைத்தொடருக்குத் தொடங்கியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அப்போது, தேவிபட்னம் மண்டலத்தின் கச்சுலுரு கிராமம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

ஓ.என்.ஜி.சியின் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேசிய பேரிடர் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்து சம்பவத்தால் தான் மிகுந்த வேதனையடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்வீட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது, 
 


ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் மிகுந்த வேதனையை அளித்துள்ளது. எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ஆந்திராவின் கோதாவரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காணாமல் போன பயணிகள் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

மீட்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்தாலோசித்து வருகிறார். இன்று பிற்பகல் நடந்த இந்த விபத்து சம்பவத்தின் போது, கோதாவரி ஆற்றில் 5 லட்சம் கியூசெக் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

முன்னதாக, மத்திய பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் முடிவில் சிலையை நீரில் கரைக்கும் நிகழ்வின் போது, 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதைத்தொடர்ந்து, சில நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

With inputs from PTI

.