This Article is From Jul 18, 2019

2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

2 நாட்களுக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!

2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில சில பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கோவை, தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 3 சென்டி மீட்டர் மழையும், கமுதி, பன்னிப்பட்டு, பெரியகுளம் ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக புவியரசன் தெரிவித்தார். 

சென்னையை பொறுத்த வரையில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பொழிய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 

.