பார்வையற்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஞ்சல் பாட்டீல்
Thiruvananthapuram: இந்தியாவின் பார்வையற்ற முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரியான 30 வயதாகும் பிரஞ்சல் பாட்டீல், திருவனந்தபுரம் மாவட்ட சப் கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சப் கலெக்டராக பொறுப்பேற்றது குறித்து பிரஞ்சல் பாட்டீல் கூறுகையில், 'நம்முடைய முயற்சிகளின் பலனாக நாம் என்ன நினைக்கிறோமோ அதனை அடைந்தே தீருவோம். எதை எடுத்துக் கொண்டாலும் நாம் விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும்' என்று கூறினார். திருவனந்தபுரத்தை இன்னும் சிறப்பு மிக்க மாவட்டமாக மாற்ற அவர் திட்டம் வைத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பாட்டீல் மகாராஷ்டிர மாநிலம் உல்ஹாஸ்நகரை சேர்ந்தவர். அவருக்கு 6 வயதாக இருக்கும்போதே பார்வைத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது.
2016-ல் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு எனப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் அவர் தேசிய அளவில் 773-வது இடத்தை பிடித்தார். அப்போது அவருக்கு இந்திய ரயில்வே கணக்காளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தனது விடா முயற்சியால் மீண்டும் அடுத்த ஆண்டு தேர்வு எழுதி 124-வது இடத்தை பிரஞ்சல் பிடித்தார். இந்த முறை அவருக்கு ஐ.ஏ.எஸ். பணி கிடைத்து, எர்ணாக்குளம் மாவட்டத்தின் உதவி கலெக்டராக அவர் பணியாற்றினார்.