இந்த சம்பவத்தை, ரைலி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவரான மார்க் ஸ்டின்ஸியானோவின் சிசிடிவி கேமரா, படம் பிடித்துள்ளது
காட்டு விலங்கினங்களில், இரு மிருகங்களுக்கு இடையில் சண்டை என்பது மிகச் சாதரணம். ஆனால், ஒரு காட்டு விலங்கும் வீட்டுப் பிராணியும் சண்டையிட்டுப் பார்த்துள்ளீர்களா. அப்படிப்பட்ட சம்பவம்தான் அமெரிக்காவில் இருக்கும் நியூ ஜெர்ஸியில் நடந்துள்ளது.
நியூ ஜெர்ஸியில் ஆள் இல்லாத வீடு ஒன்றுக்குள், ஆள் உயர கருங்கரடி நுழைந்துள்ளது. உள்ளே வந்த கரடி, பறவைகளுக்கு வைக்கப்பட்டிருந்த உணவுக் கூடையை ஆராய்ந்துள்ளது. இதைப் பார்த்த பக்கத்து வீட்டு நாயான ரைலி, குரைத்துக் கொண்டே வந்து, கரடி மீது மோதியது. தொடர்ந்து குரைத்துக் கொண்டே கரடியை வீட்டிலிருந்து துரத்தியடித்தது. முதலில் ரைலி, வருவதைப் பார்த்த கரடி, அசால்ட்டாக நின்றிருந்தது. ஆனால் ரைலியின் ஆக்ரோஷத்தால் கரடி, மிரண்டது. தொடர்ந்து விண்ணைப் பிளக்கும் சத்தத்தில் ரைலி குரைக்கவே, செய்வதறியாமல் கரடி, ஜூட் விட்டது.
இந்த சம்பவத்தை, ரைலி வீட்டுக்குப் பக்கத்தில் இருப்பவரான மார்க் ஸ்டின்ஸியானோவின் சிசிடிவி கேமரா, படம் பிடித்துள்ளது. அதைத் தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள மார்க், “அடுத்த முறை நான் எனது பக்கத்து வீட்டு நாயான ரைலியைப் பார்க்கும்போது, அதற்கு விருந்தளிப்பேன். அடிக்கடி எனது குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய எங்கள் வீட்டுக்கு வந்துபோகும் ரைலி. தற்போது இன்னொரு படி மேலே சென்றுள்ளது” என்று நெகிழ்ந்துள்ளார்.
முகநூலில் பகிரப்பட்டதில் இருந்த, அந்த வீடியோவும், மார்க்கின் போஸ்ட்டும் படுவைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ரைலியின் உரிமையாளரான ஆலன் டுலுட்ஸி, ஏபிசி7 செய்தி நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்துப் பேசும்போது, “இதைப் போல கரடிகளை ரைலி ஓடவிடுவது இது முதல் முறையல்ல. எப்போது எங்கள் வீட்டுப் பக்கத்தில் கரடியைப் பார்த்தாலும் அதை துரத்திவிடுவான் ரைலி” என்று பெருமை ததும்ப கூறியுள்ளார்.
Click for more
trending news