‘அமித்ஷா பொய் சொல்கிறார்’.. நான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளேன்: ஃபரூக் அப்துல்லா

சட்டப்பிரிவு 370 மறுசீரமைப்பு மசோதா குறித்து மக்களவையில் விவாதம் நடந்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை என்று கூறினார்.

எங்களது அரசியல் தொடரும், ஒற்றுமைக்காக நாங்கள் பாடுபடுவோம் - ஃபரூக் அப்துல்லா

New Delhi:

மக்களவையில் சட்டப்பிரிவு 370 மறுசீரமைப்பு மசோதா குறித்த விவாதத்தின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, வீட்டுக்காவலில் வைக்கப்படவோ இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து என்டிடிவி-க்கு ஃபரூக் அப்துல்லா அளித்த பேட்டியில், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். உள்துறை அமைச்சர் இதுபோன்று பொய் பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, என்னை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு வீட்டு வாசலில் காவலுக்கு அதிகாரிகளையும் நிறுத்தி வைத்துள்ளனர். என்னை வீட்டுச்சிறை வைப்பதற்கு நீங்கள் யார்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். 

தொடர்ந்து, மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய திமுக மக்களவை எம்.பி.,க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு எங்கள் நண்பர் ஃபரூக் அப்துல்லா எங்கே? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். 

இந்த மசோதாவை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் அமர்ந்திருந்த நிலையில், இந்த அவையில் இருக்க வேண்டிய எங்கள் நண்பர் ஃபரூக் அப்துல்லா எங்கே என்பதற்கு உள்துறை மந்திரி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

இதேபோல், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதையும் அமித்ஷா தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக தயாநிதி மாறனும் கேள்வி எழுப்பினார். 

Newsbeep

இதையடுத்து, அமித்ஷா பேசுகையில், ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவோ, தடுப்புக்காவலில் வைக்கப்படவோ இல்லை. தனது இல்லத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் இருக்கிறார்” என்றார். 

முன்னதாக, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி நேற்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. 

ஜம்மு-காஷ்மீரை மத்திய அரசு பிரித்து இருப்பது ஒருவரின் உடலை துண்டு போடுவதற்கு சமமானது. மாநிலத்தை பிரித்த இவர்கள், மக்களின் இதயங்களையும் இரண்டாக கூறு போடுவார்களா என மத்திய ஆட்சியாளர்கள்? என ஃபருக் அப்துல்லா கேள்வி எழுப்பினார். 

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த போது மத்திய அரசு கொடுத்த உத்தரவாதத்தை மீறிவிட்டதாக ஃபருக் அப்துல்லா குற்றம் சாட்டினார். ஒற்றுமைக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். காஷ்மீர் இந்தியாவில் இருந்து ஒருபோதும் பிரிந்து போக விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.