This Article is From Sep 03, 2019

'என்ன சொல்ல விரும்புறீங்க?-5 சதவீதம்'! சிபிஐ கஸ்டடியிலும் மத்திய அரசை கலாய்த்த ப.சிதம்பரம்!

வியாழன் வரைக்கும் கஸ்டடியில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

ப.சிதம்பரம் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

New Delhi:

சிபிஐ கஸ்டடியில் இருந்தபோதும், மத்திய அரசை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலாய்க்கும் வீடியோ, வைரலாகி வருகிறது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த 21-ம்தேதி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் இந்திரானியின் மகள் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ளனர்.

அவர்கள், சிதம்பரம்தான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு நடக்க உதவி செய்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிதம்பரம் கைதாகி இருக்கிறார். கடந்த 21-ம்தேதியில் இருந்து தொடர்ச்சியாக சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது வியாழன் வரைக்கும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
 

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்திற்கு வந்த ப.சிதம்பரத்திடம், என்.டி.டி.வி. செய்தியாளர், 'ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? கடந்த 15 நாட்களாக சிபிஐ காவலில் இருக்கிறீர்கள்! அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்டார்.

இதற்கு தனது 5 விரல்களையும் கேமராவில் காட்டி 5 சதவீதம் என்று சிதம்பரம் பதில் அளித்தார். பின்னர் பேசிய அவர், '5 சதவீதம் என்றால் உங்களுக்கு தெரியுமா? நினைவுபடுத்திப் பாருங்கள் 5 சதவீதம்' என்று பதில் அளித்தார்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்து நாட்டின் வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நபர்கள் விமர்சித்து வரும் நிலையில், சிபிஐ கஸ்டடியில் இருந்தபோதும் ப.சிதம்பரம் மத்திய அரசை கிண்டல் செய்துள்ளார். 

.