“தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சித் தலைராக இருக்கும் ராகுல் காந்திக்கு பதிலாக தான் பொறுப்பேற்கத் தயார் என்று பகிரங்கமாக கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சராக அஸ்லாம் ஷேர் கான். இவர் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அணி சார்பில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறியவுடன் நான் தலைமை பொறுப்பை ஏற்கத் தயார் என்று சொல்லி கடிதம் எழுதினேன். நேரு- காந்தி குடும்பத்திற்கு வெளியில் இருந்து ஒருவர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்தினேன். அந்த கடிதத்தில், ராகுல் காந்தி தலைமை பொறுப்பில் நீடிக்க வேண்டும் என்று நினைத்தால், அவரால் கண்டிப்பாக சிறப்பாக செயலாற்ற முடியும். இல்லையென்றால், நான் அந்த பொறுப்பை 2 ஆண்டுகளுக்கு ஏற்கத் தயார் என்று குறிப்பிட்டேன்” என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெல்லியில் கடந்த மே 25 ஆம் தேதி, அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார் ராகுல் காந்தி. அவரது இந்த முடிவுக்குத் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு நிலவி வருவதால், இன்னும் அவரது ராஜினாமா குறித்து காங்கிரஸ் முடிவெடுக்கவில்லை.
தான் எழுதிய கடிதம் கூறித்து கான் மேலும் கூறுகையில், “என்னுடைய தனிப்பட்ட லாப நோக்கிற்காக நான் அப்படியொரு கடிதத்தை எழுதவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் வேண்டும் என்று நினைத்ததால் அப்படி எழுதினேன். கட்சி இக்கட்டான காலத்தில் பயணிக்கும் சூழலில் தலைமை பொறுப்பை ஏற்கத் தயார் என்றுதான் சொன்னேன்.
அதே நேரத்தில் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியை குற்றம் சாட்ட முடியாது. அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்துவிட்டார். ஆனால் மக்கள் நரேந்திர மோடிதான் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று நினைத்தனர்.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. என்னைவிட யாராவது சிறந்த வேட்பாளர்கள் இருந்தார்கள் என்றால் அவர்களுக்குத் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்” என்று விளக்கினார்.