This Article is From Aug 13, 2019

“இருக்கு... இன்னைக்கு சென்னைக்கு மழை இருக்கு…”- ‘தமிழ்நாடு வெதர்மேன்’ அப்டேட்!

“கடந்த 3 நாட்களாக சென்னையின் வட புறநகர்ப் பகுதிகள்தான் மழையைப் பெற்று வந்தன"

“இருக்கு... இன்னைக்கு சென்னைக்கு மழை இருக்கு…”- ‘தமிழ்நாடு வெதர்மேன்’ அப்டேட்!

"தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கூட இன்று மழை  பெய்ய வாய்ப்பிருக்கிறது."

தமிழகத்தின் மேற்குப் பகுதியிலும் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னைக்கு இன்று மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரபல வானிலை கணிப்பாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட தகவல்படி, “கடந்த 3 நாட்களாக சென்னையின் வட புறநகர்ப் பகுதிகள்தான் மழையைப் பெற்று வந்தன. இன்று அது மாறும். இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தென் சென்னைப் பகுதிகளிலும் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. இன்று பரவலான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். மேற்குறிப்பிட்ட இடங்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கூட இன்று மழை  பெய்ய வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக சிவகங்கை, புதுக்கோட்டை பகுதிகளில் அதிக மழை பெய்யலாம். மதுரைக்கும் வாய்ப்புள்ளது.

பெங்களூருவில் இன்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கும். அடுத்த ஒரு வாரத்துக்கு பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்யவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

அண்டை மாநிலமான கேரளாவின் பல மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து தெரிவித்துள்ள தமிழ்நாடு வெதர்மேன், “கேரளாவைப் பொறுத்தவரை அங்கு மிதமான மழையே பெய்யக்கூடும். சில இடங்களில் தொடர்ந்து ஒரு மணி நேர கனமழைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால், கடந்த வாரம் போல அதிக மழை இருக்காது. ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருந்தாலும், அது குறித்து கவலைப்பட வேண்டாம். அடுத்து வரும் நாட்களில் கேரளாவில் மழை பொழிவு குறைய ஆரம்பிக்கும்” என்று கூறியுள்ளார். 

.