தமிழகத்தில் 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு!

இந்தப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அவரது 10 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்வு

ஹைலைட்ஸ்

  • 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு!
  • தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா
  • வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் 10 மாத குழந்தை உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறும்போது, தாய்லாந்து நாட்டினருடன் தொடர்பில் இருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 8 பேரில் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர். ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் 4 பேர். ஈரோட்டில் தொற்று உறுதியான நபர்கள் 4 பேரும் டெல்லியிலிருந்து திரும்பியவர்கள். இந்தப் பட்டியலில் கோவையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அவரது 10 மாத குழந்தை மற்றும் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோட்டில் 27,725 பேருக்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சேலத்தில் 80 ஆயிரம் பேருக்கும் சென்னையில் ஒரு லட்சம் பேருக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தனிமைப்படுத்தலுக்கான படுக்கைகளை அதிகப்படுத்தவும் நோயாளிகளுக்கான வார்டுகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடு சென்று தமிழகம் திரும்பிய 93 ஆயிரம் பேர்களின் விவரங்களை விமானநிலையத்திலிருந்து பெற்றுள்ளதாகவும் அதில் 43,538 பேர் தமிழகத்தில்தான் உள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்தப் பட்டியலைக் கொண்டு மாவட்ட வாரியாக சுகாதாரத்துறையினர் வீடுவீடாக சென்று சோதனை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதுகுறித்த தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தனது ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று குணமடைந்திருப்பதாகவும் அவர் மற்றொரு ட்வீட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.