This Article is From Dec 12, 2019

எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது: அமைச்சர் செல்லூர் ராஜூ

எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

எகிப்து வெங்காயம் இதயத்திற்கு நல்லது: அமைச்சர் செல்லூர் ராஜூ

வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும்

இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது என்றும், எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

கடந்த ஒருமாதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பெய்த தொடர் கன மழையால் வெங்காயப் பயிர்கள் முற்றிலும் அழிந்து நாசமானதால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக எகிப்து நாட்டிலிருந்து வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, எகிப்து நாட்டு வெங்காயம் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு வந்திறங்கியது. எனினும், எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்களை வாங்க மக்கள் மறுப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே எகிப்து வெங்காயத்தை சாப்பிட்டு பார்த்து அதன் தன்மையை பரிசோதித்தார்.

அடுத்து வரும் நாட்களில் தமிழகத்திலேயே 25,000 மெட்ரிக் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது. தற்போது வெங்காய வரத்து அதிகமாக இருப்பதால், வரும் காலங்களில் வெங்காயம் விலை கணிசமாக குறையும் என்றார்.

மேலும் பேசிய அவர், இதய நோய் உள்ளவர்களுக்கு எகிப்து வெங்காயம் நல்லது என்றும், எகிப்து வெங்காயத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும் என்று கூறினார். 

வெங்காயம் விலை அதிகரிக்கும் பட்சத்தில் நகரும் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் எனக் கூறிய அவர், ரேஷன் கடைகளில் வெங்காயத்தை விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

.